தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கண்டி மாவட்டத்தில் கடந்த நான்கரை வருடங்களில் தளம்பலற்ற செல்வாக்குநிலை தொடர்ந்தது.கடந்த ஜனாதிபதி தேர்தலின்போதுகூட இதனை நிரூபித்தோம். பொதுத்தேர்தலிலும் பலத்தைக்காட்டுவோம் – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” கண்டி மாவட்டத்தில் 13 தேர்தல் தொகுதிகள் இருக்கின்றன. இவற்றில் நாவலப்பிட்டிய, கம்பளை, பாத்ததும்பர மற்றும் பாத்த ஹேவாஹெட்ட ஆகிய நான்கு தொகுதிகளில் மாத்திரமே சஜித் பிரேமதாச வெற்றிபெற்றார். அத்தொகுதிகளில்தான் தமிழ் மக்களே அதிகம் வாழ்கின்றனர். எனவே, வெற்றிக்கான களத்தை முற்போக்கு கூட்டணியே எமது செயற்பாடுகள் ஊடாக அமைத்துக்கொடுத்தது. எமது செல்வாக்கு எப்படியுள்ளது என்பது இதன்மூலம் உறுதியாகின்றது.
அதுமட்டுமல்ல கடந்த உள்ளாட்சிமன்றத்தேர்தலில் தனித்துபோட்டியிட்டு 23 ஆயிரம் வாக்குகளைப்பெற்றோம். எமக்கென இன்று 11 உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றனர். எனவே, இத்தேர்தலிலும் எமக்கான மக்கள் செல்வாக்கு தொடரும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது.
கண்டி மாவட்டத்தில் மொட்டும், யானையும் போட்டியிடுகின்றன. இவை இரண்டுமே எமக்கு சவால் அல்ல. ஏனெனில் மக்கள் ஆதரவு எமக்கே இருக்கின்றது. கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இனி எப்போதும் இழக்கக்கூடாது என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர்.
கடந்தகாலங்களில் இருந்து பாடமும் கற்றுள்ளனர். எனவே, தமிழ்ப் பாராளுமன்றத்தை இழக்கும் வகையிலான தவறை அவர்கள் செய்யமாட்டார்கள். எனவே, மேற்படி இரு கட்சிகளைவிடவும் நாம் பலமாக இருக்கின்றோம். ” – என்றும் வேலுகுமார் கூறினார்.