ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில், கண்டி மாவட்டத்திலும் 13 தொகுதிகளிலும் அவர் பெருவாரியாக வெற்றிபெறுவார் என்று சமூக செயற்பாட்டாளரும், வீ.கே. இளைஞர் அணி தலைவருமான ஜீவன் சரண் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணிலின் வெற்றிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தலைமையில் கண்டியில் தீவிர பரப்புரைகள் இடம்பெற்றுவருவதாகவும், இன்றைய (18) தினம்கூட பல கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் ஜீவன் சரத் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
“ இற்றைக்கு இரு வருடங்களுக்கு முன்னர் நாம் அனைவரும் வரிசைகளில் காத்திருந்தோம்.எரிபொருள் வரிசை, எரிவாயு வரிசை, மருந்து வரிசை என வரிசை யுகமொன்றே உருவாகி இருந்தது. இந்நிலைமையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மாற்றியமைத்தார். அவருக்கு பக்கபலமாகவும், நாட்டின் நலன் கருதியுமே அவர் பக்கம் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் நிற்கின்றார். எமது கண்டி மாவட்ட மக்களின் கோரிக்கையின் பிரகாரமே நாம் இந்த முடிவை எடுத்து தீவிரமாக செயற்பட்டுவருகின்றோம்.
செப்டம்பர் 21 ஆம் திகதியும் நாம் வரிசையில் நின்றே வாக்களிக்க வேண்டும். அந்த வரிசை நாட்டுக்கானது, நமது எதிர்காலத்துக்கானது. எனவே, எதிர்காலத்தில் மீண்டும் வரிசை யுகம் ஏற்படாமல் இருப்பதற்காக உரிய வகையில் வாக்களிப்போம். உங்கள் தேர்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவாகவே இருக்கும் என உறுதியாக நம்புகின்றோம்.
மக்கள் மத்தியில் சென்று பிரச்சாரங்களை முன்னெடுத்தோம். கண்டி மாவட்டத்தில் 13 தொகுதிகளிலும் மக்கள் ரணிலின் தலைமைத்துவத்தையே கோரி நிற்கின்றனர்.” – என்றார்.