கண்டி – உடபளாத பிரதேச சபையின் உறுப்பினர் குமாரவேல் கனகரத்னத்தின் கட்சி உறுப்புரிமையை இல்லாது செய்வதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி எடுத்த தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைகால தடையுத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று (15) இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு இந்த தடையுத்தரவு செலுப்படியாகும் என நீதிமன்றம் இன்று அறிவித்ததாக, குமாரவேல் கனகரத்னம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குமா துனுசிங்க தெரிவிக்கின்றார்.
ஒருமித்த முற்போக்கு கூட்டணி சார்பில் உடபளாத பிரதேச சபைக்கு தெரிவான குமாரவேல் கனகரத்னம், கட்சியின் மாதாந்த கூட்டங்களுக்கு தொடர்ச்சியாக பங்குப்பற்றாமையின் ஊடாக, அவர் கட்சியின் சட்டங்களை மீறி, கட்சிக்கு எதிராக செயற்படுவதாக தெரிவித்து, அவரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து விலக்குவதாக 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் திகதியிடப்பட்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் கடித உறையின் கீழ் அறிவிக்கப்பட்டிருந்தது.
கட்சியின் தலைவர் மனோ கணேசன், இந்த அறிவித்தலை, கண்டி தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இவ்வாறு கட்சியின் தலைவர் மனோ கணேசனினால் பதவி விலக்கப்பட்டமைக்கான அறிவித்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, குமாரவேல் கனகரத்னத்தின் பிரதேச சபை உறுப்பினர் பதவி இல்லாது செய்யப்படுவதை வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்படும் என கண்டி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் திகதி குமாரவேல் கனகரத்னத்திற்கு பதிவு தபால் மூலம் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த தீர்மானத்திற்கு எதிராக குமாரவேல் கனகரத்ன, கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து குமாரவேல் கனகரத்னம், இடைநிறுத்தப்பட்டமையை 14 நாட்களுக்கு தடை செய்யும் வகையில் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவிற்கு அமைய, குமாரவேல் கனகரத்னத்திற்கு எதிராக எந்தவொரு தீர்மானமும் நீதிமன்ற உத்தரவு வரும் வரை கட்சியினால் எட்ட முடியாது என சட்டத்தரணி தெரிவிக்கின்றார்.
கட்சிக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இடைகால தடையுத்தரவு காரணமாக, குமாரவேல் கனகரத்னத்தின் பதவி பறிப்போவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணி மேலும் கூறுகின்றார். இந்த வழக்கு மீதான விசாரணைகள் ஏப்ரல் மாதம் 29ம் திகதி இடம்பெறவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நன்றி – ட்டூ சிலோன்
