கலவரத்தை பயன்படுத்தி 15 ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம்!

 

நேபாளத்தில் ஏற்பட்ட கலவரத்தைப் பயன்படுத்தி அங்குள்ள சிறைகளிலிருந்து சுமார் 15 ஆயிரம் கைதிகள் தப்பி உள்ளனர். இவர்களில் 32 வருடம் தண்டனை பெற்ற கைதியான நிழல் உலக தாதா உதய் சேத்தியும் மாயமாகி உள்ளார்.

நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டத்தால் அந்நாட்டில் அமைதியின்மை நிலவுகிறது. பொது மக்களுக்கும் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

இந்தச் சூழலில் போராட்டக்காரர்களால் பல சிறைகளின் கதவுகளும் உடைக்கப்பட்டன. இதைப் பயன்படுத்தி நேபாளின் 20-க்கும் மேற்பட்ட சிறைகளிலிருந்து சுமார் 15,000 கைதிகள் தப்பி உள்ளனர்.

இவர்களை நேபாள ராணுவம் தடுத்தபோது ஏற்பட்ட மோதலில் 3 கைதிகள் உயிரிழந்தனர். இவர்களில் பல முக்கிய கைதிகளில் ஒருவரான உதய் சேத்தியும் ரசுவா சிறையிலிருந்து தப்பியுள்ளார்.

மும்பையின் நிழல் உலக தாதாக்களுடன் இணைந்து ஆள் கடத்தலில் ஈடுப்பட்டிருந்தவர் இவர். உதய் சேத்தியின் குற்றங்களுக்கு நேபாள நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 32 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்து வந்தார்.

இந்திய எண்களில் இருந்து அழைத்து நேபாளத் தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது உதயின் தொழிலாக இருந்தது. இவர் சிறையில் அடைக்கப்பட்ட பின் நேபாளத்தில் தொழிலதிபர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்தியா – நேபாள எல்லையில் எல்லைப் பாதுகாப்பு படையினர கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நேபாளத்திலிருந்து இந்தியாவில் நுழைபவர்கள் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
பிஹார், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நேபாள எல்லைகள் அமைந்துள்ளன.

Related Articles

Latest Articles