கண்டி, கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரவத்தை பகுதியில் மேலுமொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (07.11.2020) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.14 வயதுடைய மாணவரொருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களிடமும் பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
கலஹா – பேரவத்தை பகுதியில் இருந்து கடந்த மாதம் 15 ஆம் திகதி16 வயதுடைய சிறுவனும், அவரின் பெற்றோரும் மீன் வாங்குவதற்காக பேலியகொடை மீன் சந்தைக்குச்சென்று மறுநாள் ஊர் திரும்பினர்.
பேலியகொடை கொரோனா கொத்தணி பரவலையடுத்து இவர்களிடம் கடந்த மாதம் 24 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பரிசோதனை முடிவுகள் 26 ஆம் திகதி வெளியாகின. இதில் 16 வயதுடைய சிறுவனுக்கு வைரஸ் தொற்று உறுதியானது.
இதனையடுத்து இவர்களுடன் தொடர்பில் இருந்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்நிலையில் 14 வயதுடைய சிறுவன் ஒருவருக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டதால் அவரிடம் நேற்று முன்தினம் 5 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. இன்று (7) பிசிஆர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.
எனவே, ஏனைய உறுப்பினர்களிடமும் இன்று பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. கொரோனா தொற்றுக்குள்ளான சிறுவர் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அழைத்துச்செல்லப்படவுள்ளார்.