” காணி உரிமை தொடர்பில் அரசு இதய சுத்தியுடன் செயற்படவில்லை” – வேலுகுமார்

” மலையக மக்களுக்கான காணி உரிமை விடயத்தில் அரசு இதய சுத்தியுடன் செயற்படவில்லை. காணி உரிமை தொடர்பில் 4 பில்லியனை ஒதுக்க எதிர்பார்க்கின்றேன் என்று மட்டுமே ஜனாதிபதி கூறியுள்ளார். எனவே, இது விடயத்தில் அரசு இதய சுத்தியுடன் செயற்பட்டால் இணைந்து பயணிக்கலாம்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

” ஒற்றுமையாக செயற்படுவதன்மூலம் எமது மக்களின் உரிமைகளை அடைய முடியும் என்று அமைச்சர் ஜீவன் தொண்டமானும், நாடாளுமன்ற உறுப்பினர் ரமேசும் கூறியிருந்தனர். இதனை வரவேற்கின்றோம். ஒன்றுமையான செயற்பாட்டின்மூலம் அடையாளம் என்பது உண்மை.

ஆனால் பொருளாதார நெருக்கடியால் எமது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருட்களின் விலைகளும் எகிறியுள்ளன. மின்சார கட்டணத்தை செலுத்த முடியாதுள்ளது. உணவு தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதீட்டில் ஒரு முன்மொழிவை செய்திருக்கலாம். அது செய்யப்படவில்லை. மக்கள் ஓரங் கட்டப்பட்டுள்ளனர். இதனை செய்திருந்தால் ஆதரவு வழங்க முடியும்.

காணி உரிமை சம்பந்தமாக 4 பில்லியனை வழங்க எதிர்பார்க்கின்றேன் என்று மட்டுமே ஜனாதிபதி கூறியுள்ளார். இது எதிர்பார்ப்பு மட்டுமே. இது விடயத்தில் அரசு இதய சுத்தியுடன் செயற்படவில்லை. அவ்வாறு செயற்பட்டால் இணைந்து செயற்பட முடியும்.” – என்றார்.

Related Articles

Latest Articles