மர்மமாக உயிரிழந்த இளம்பெண் மரணம் ஆணவக்கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
தமிழகம், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா இருவரும் திருப்பூரில் ஒன்றாக பணியாற்றிய நிலையில், காதலித்து கடந்தாண்டு டிசம்பர் 31 ஆம் திகதி பெற்றோரின் எதிர்ப்பை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.
அதன்பின்னர் இருவரும் திருப்பூரில் பணிபுரிந்து வந்தனர்.
திருமணம் செய்தது பெற்றோருக்கு தெரியவந்த பின்னர் சமாதானம் ஆனதாக கூறி குடும்பத்தினர் ஐஸ்வர்யாவை ஊருக்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில், கடந்த 3-ம் திகதி ஐஸ்வர்யா மர்மமாக உயிரிழந்தார். யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் ஐஸ்வர்யாவின் சடலத்தை குடும்பத்தினர் எரித்துள்ளனர்.
இதையடுத்து மனைவி ஐஸ்வர்யா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கணவர் நவீன் அளித்த முறைப்பாட்டின் பிரகாரம், இளம்பெண் மரணம் ஆணவக்கொலையா? என பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.