அமெரிக்க போர்க்கப்பல்கள் ஈரான் பகுதியை நோக்கி நெருங்கியுள்ள நிலையில், தலைநகர் தெஹ்ரானில் உள்ள எங்கெலாப் சதுக்கத்தின் புதிய சுவரோவியம் ஒன்றை ஈரான் அரசு வெளியிட்டது.
அதில், “காற்றை விதைத்தால், சூறாவளியை அறுவடை செய்வீர்கள். எங்கள் நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் நடத்த முயற்சிக்க வேண்டாம்” என்று அமெரிக்காவிற்கு நேரடி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் மற்றும் அதனுடன் வரும் போர்க்கப்பல்கள் ஈரான் பிராந்தியத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் வேளையில், எங்கெலாப் சதுக்கத்தில் உள்ள சுவரோவியத்தில், ஒரு விமானம் தாங்கி கப்பலின் மேல்தளத்தில் சேதமடைந்த மற்றும் வெடித்துச் சிதறிய போர் விமானங்கள் காணப்படுகின்றன.
போர் விமானங்களின் வெடிப்புகள் நட்சத்திர வடிவங்களில் தெரிகின்றன.
அந்தத் தளம் சடலங்களாலும், ரத்தத்தாலும் சேதமடைந்துள்ளது. அந்த ரத்தம் தண்ணீரில் வழிந்தோடி, அமெரிக்க தேசியக் கொடியின் கோடுகளைப் பிரதிபலிப்பது போல் தெரிகிறது. அந்த சுவரோவியத்தில் எழுதப்பட்டுள்ள எச்சரிக்கை வாசகத்தில், ‘நீங்கள் காற்றை விதைத்தால், சூறாவளியை அறுவடை செய்வீர்கள்’ என எழுதப்பட்டுள்ளது.
தெஹ்ரானில் உள்ள இந்த சதுக்கம் பெரும்பாலும் அரசால் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களின் விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதிகாரிகள் தேசிய நிகழ்வுகளின் அடிப்படையில் சுவரோவியத்தை மாற்றுவார்கள்.
அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் மற்றும் அதனுடன் வரும் போர்க்கப்பல்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை மத்திய கிழக்கு பகுதிக்கு வந்தடைந்து ஈரானுக்கு அருகில் உள்ளது என்று இஸ்ரேலின் சேனல் 13 செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஏவுகணை பாதுகாப்புக்காக வடிவமைக்கப்பட்ட அமைப்புகளை ஏற்றிச் செல்லும் ஒரு கப்பல் இஸ்ரேலை நெருங்குகிறது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
டொனால்ட் ட்ரம்ப், “நிறைய கப்பல்கள் தெஹ்ரான் திசையை நோக்கிச் செல்கின்றன என்றும், ஒரு பெரிய கப்பற்படை அந்த நாட்டை நோக்கிச் செல்கிறது” என்றும் கூறியதைத் தொடர்ந்து ஈரான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.










