பசறையிலிருந்து மடூல்சீமை வழியாக பிட்டமாருவை கிராமத்தை நோக்கி செல்லும் பாதை பல வருடங்களாக செப்பனிடப்படாத காரணத்தால் சேதமடைந்து குன்றும் குழியுமாக காணப்படுவதால் இப்பாதையுடான பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக இப்பகுதியில் வாழும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மடூல்சீமையில் இருந்து பிட்டமாருவை செல்லும் வழியில் டூமோ, ஊவாக்கலை, கல்லுல்லை, கொக்காக்கலை, ராகலை, எலமான் மற்றும் ரோபேரி போன்ற பெருந்தோட்டங்களும் காணப்படுகின்றன.
கொக்காக்கலைக்கும் பிட்டமாருவைக்கும் இடையே சுமார் 10கிலோமீற்றர் வரையான பகுதி பல வருடங்களாக செப்பனிடப்படாமல் உள்ளது. இப்பாதையினூடாக பதுளை டிப்போவிற்கு சொந்தமான இ.போ.சபை பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் சேவையில் ஈடுபடுகின்றன.
பாதை சேதமடைந்துள்ளதால் பஸ் வண்டியின் சாரதி, நடத்துனர் மற்றும் பயணிகள் ஒன்றிணைந்து தினமும் செப்பனிட்டு பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாதை சீர்கேடு காரணமாக அடிக்கடி பஸ் வண்டிகள் பழுதடைந்து சேவையை நிறுத்தி கொள்கின்றன.
மட்டுப்படுத்தப்பட்ட பஸ் சேவையே இடம் பெறுவதால் இப்பகுதியில் இருந்து பட்டாவத்தை தமிழ் வித்தியாலயத்திற்கு செல்லும் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். கால்நடையாகவும் மாணவர்கள் நீண்ட தூரத்தில் இருந்து பாடசாலைக்கு வருகின்றனர்.
ராகலை பகுதியில் இருந்து எலமான், ரோபேரி பாடசாலைகளுக்கு செல்லும் ஆரம்ப பிரிவு மாணவர்களும் கால்நடையாகவே செல்கின்றனர். இப்பகுதியில் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் காணப்படும் சிறிய உலக முடிவை (Mini Worlds end) காண வரும் சுற்றுலா பயணிகளும் கொக்காக்கலை பகுதிக்கு பிறகு பாதை சேதமடைந்துள்ளதால் கால்நடையாக சிரமத்துடன் உலக முடிவை பார்வையிட்டு செல்கின்றனர். குறித்த சேதமடைந்த பாதை காணப்படும் பகுதியில் சுமார் 750 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களின் கல்வி , சுகாதார மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சேமடைந்துள்ள பாதையை உடன் செப்பனிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.