ஆபாசப்பட நடிகை வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் அதிபர்கள், முன்னாள் அதிபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் ரகசிய காவல் படை புடை சூழ, நியூயார்க் நேரப்படி, நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு நீதிமன்றத்திற்கு டிரம்ப் வருகை தந்தார்.
கூடியிருந்தவர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு, ரகசிய வழியில் நீதிமன்றத்திற்குள் சென்றார். அரசியல் அரங்கில் பகட்டான, வெகு ஆர்ப்பாட்டமான அரசியல்வாதி என்று பெயரெடுத்த டிரம்ப், நீதிமன்றத்திற்குள் நீதிபதி முன்னிலையில் மிகவும் அமைதியாக காணப்பட்டார்.
நீதிபதியின் கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகளிலேயே அவர் பதிலளித்தார். அவர் மீதான 34 குற்றச்சாட்டுகளையும் நீதிபதி வாசித்த போது, நான் குற்றவாளி இல்லை என்று மட்டுமே அவர் பதிலளித்தார்.
உடல் மொழியிலோ, முக பாவனைகளிலோ அவர் எந்தவொரு உணர்ச்சிகளையும் வெளிக்காட்டவில்லை.
சுமார் 57 நிமிடங்கள் நீதிமன்றத்தில் இருந்த டிரம்ப், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
நீதிமன்றத்தில் இருந்து நேரடியாக, புளோரிடாவில் உள்ள தனது எஸ்டேட்டிற்கு விரைந்த டிரம்ப், அங்கே தனது ஆதரவாளர்களிடையே பேசினார். அப்போது, இந்த வழக்கு நாட்டிற்கே பெரும் அவமானம் என்று அவர் விமர்சித்தார்.
