மத்திய மாகாணத்தில் 2020 ஆம் ஆண்டுக்கான இறுதி கணக்காய்வின் அறிக்கையின்படி கொட்டகலை பிரதேச சபைக்கு சிறந்த சபைக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த சபையின் சிறந்த சேவைக்கு வழிகாட்டிய அமரர் ஆறுமுகன் தொண்டமான், ஒத்துழைப்பு வழங்கிய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட செயலாளர், உத்தியோகத்தர்கள், சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.
கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” கொட்டகலை பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வட்டாரங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் முதலாவது கட்ட நடவடிக்கையில் பெருமளவில் மக்கள் கலந்து கொண்டது போல, இரண்டாவது கட்டத்துக்கும் ஒத்துழைப்பு வழங்க உறுப்பினர்கள் தமது பங்களிப்பைச் செய்து வந்துள்ளார்கள்.
இருந்தும் சிலர் தவறான விமர்சனங்களையும் தடுப்பூசி தொடர்பான அச்சத்தையும் மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றார்கள். விரைவில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் போது அனைவரும் பங்கு கொள்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த மாதத்தில் எமது சபையின் ஊடாக 500 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சத்துணவு பொதிகளை வழங்க ஏற்பாடு செய்திருந்த போதிலும் அந்த எண்ணிக்கை 600 ஆக அதிகரித்திருந்தது. இதற்கென 7 ½ இலட்ச ரூபா செலவில் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் சேதனப் பசளை திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கர் விவசாயத்துக்கு 8 மூடை உரம் வழங்கப்பட்டு வருகின்றது. தமது விவசாய நிலங்களை பதிவு செய்து கொள்வதன் ஊடாக அனைவரும் உரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். மேலும், கொட்டகலை பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வீதிகளுக்கு பெயர் சூட்ட ஆளுநரின் அன்காரதைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான ஆலோசனைகள் சகல உறுப்பினர்களிடமிருந்தும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கொட்டகலை பிரதேச சபை புதிதாக உருவாக்கப்பட்ட ஓரு சபையாகும். எந்த விதமான முன் அனுபவமும் இல்லாத நேரத்தில் என்னை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவைத்து சிறந்த முறையில் வழிகாட்டிய பெருமைக்கு உரியவராக அமரர் ஆறுமுகன் தொண்டமான் இருக்கின்றார்.
அவரின் மறைவுக்குப் பிறகு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தேவையான நிதிகளை ஒதுக்கிக் கொடுத்து அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார்.
அதேபோல், பிரதேச சபை உறுப்பினர்களின் பூரண ஒத்துழைப்போடு செயலாளர் உட்பட சகல உத்தியோகத்தர்களும் தமது கடமையை உணர்ந்து செயற்பட்டு வந்துள்ளதால் கணக்கு வழக்கு அறிக்கையில் எந்த விதமான ஊழலும் இல்லாத சிறந்த சபைக்கான அங்கீகாரம் மத்திய மாகாணத்தில் கிடைத்துள்ளது. அதேபோல், மத்திய மாகாண உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையில் நடைபெறவுள்ள போட்டிகளில் எமது சபை வெற்றி பெறாவிட்டாலும் சிறந்த சபையாகத் தெரிவு செய்யப்பட்டாலே போதும் என்பதால் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.
