கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளைமீட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான திட்டங்களுக்கும் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (20) மூன்றாவது நாளாகவும் நடைபெற்ற வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கொரோனா வைரஸ் உலகளாவியத்தொற்றாகும். எனவே, குறித்த வைரஸ் தொற்றால் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்வது தொடர்பிலேயே முன்னுரிமை – முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும். ஆனால், கொரோனா ஒழிப்பு நடவடிக்கை தொடர்பில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் குறைந்தளவான கவனமே செலுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக வைரஸை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள், பிசிஆர் பரிசோதனைகளை எவ்வாறு அதிகரிப்பது, கொரோனா தாக்கத்தால் சுற்றுலாத்துறை உட்பட வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான உபாய மார்க்கங்கள் எவை என்பவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. அதாவது அரசாங்கத்தின் தூரநோக்கு திட்டங்களும், இலக்குகளும் இல்லை என்பது இதன்மூலம் உறுதியாகின்றது.
கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி தொடர்பில் உலக நாடுகள் கவனம் செலுத்தியுள்ளன. ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி ஒப்பந்தங்களைக்கூட நிறுவனங்களுடன் செய்துள்ளன. நாம் இன்னும் பின்மட்டத்திலேயே இருக்கின்றோம். எனவே, தடுப்பூசிகளை வாங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும்.
அதேவேளை, புதியதொரு வைரஸ் தொற்று அபாயம் தொடர்பில் அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அது தொடர்பிலும் முன்கூட்டியே விழிப்பாக இருப்போம்.” – என்றார்.