கொழும்பின் பல பகுதிகளில் குண்டு தாக்குதல் நடக்கலாம் என பரவி வரும் தகவல்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என்று பொலிஸ் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மீதும், பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, மிரிஹான, நுகேகொட, கல்கிஸ்ஸ ஆகிய பிரதேசங்களிலும் இந்தத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற வதந்தி பரவி வருவதாகவும், இது முற்றிலும் போலிச் செய்தி என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தத் தகவல்கள் உண்மை இல்லை என்பதை இராணுவத் தளபதியும் உறுதிசெய்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு குறித்து அவதானமாக செயற்பட்டு வருவதாகவும், இவ்வாறான போலிச் செய்திகளை மக்கள் பரப்புவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு வெளியான அச்சுறுத்தல் எடிட் செய்யப்பட்டு சமூக வலைத்தளத்தில் இந்தத் தகவல் பரப்பப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.