கொழும்பை ஆளப்போவது யார்? இன்று பலப்பரீட்சை!

இலங்கையில் உள்ள மிக முக்கிய உள்ளுராட்சி சபையான கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கு பிரதான இரு கட்சிகளும் பலப்பரீட்சை நடத்திவரும் நிலையில், இன்று முடிவு தெரியவரவுள்ளது.

கொழும்பு மேயர் மற்றும் பிரதி மேயரை தெரிவுசெய்வதற்காக விசேட அமர்வு இன்று இடம்பெறுகின்றது.

இலங்கையிலுள்ள 341 உள்ளுராட்சிசபைகளில் கொழும்பு மாநகரசபை பிரதான சபையாகக் கருதப்படுகின்றது.
இம்முறை நடைபெற்ற தேர்தலில் அச்சபையில் ஆட்சியமைப்பதற்குரிய அறுதிப்பெரும்பான்மை பலத்தை எந்தவொரு கட்சியும் பெறவில்லை.

ஆட்சியமைப்பதற்கு 59 ஆசனங்களை பெறவேண்டிய நிலையில் தேசிய மக்கள் சக்தி வசம் 48 ஆசனங்களே உள்ளன. சில கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இதனையடுத்தே கொழும்பு மாநகர சபையில் தமது கட்சி ஆட்சியமைப்பது உறுதியென தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
கொழும்பு மாநகரசபையில் 29 இடங்களைப் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி (13), ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (05), முஸ்லிம் காங்கிரஸ் (04), சர்வஜன அதிகாரம் (02) உள்ளிட்ட தரப்புகளின் ஆசியுடன் ஆட்சியமைக்க முயற்சித்துவருகின்றது.

இந்நிலையில் தமது அணிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கொழும்பு மாநகரசபையென்பது ஐக்கிய தேசியக் கட்சியின் இருப்புக் கோட்டையாக இருந்து வந்தது. மஹிந்த அலை வீசிய காலப்பகுதியில்கூட கொழும்பு மாநகரசபையை மஹிந்த தரப்பால் கைப்பற்ற முடியவில்லை.

எனினும், இம்முறை தேசிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களைப் பெற்றது.

Related Articles

Latest Articles