நாட்டின் பல பிரதேசங்களில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, பெரகல- கொஸ்லாந்தைப் பகுதியில், மண்மேட்டுடன் பாரிய கற்பாறைகள் சரியும் அபாயம் நிலவுகின்றது. இதனால் அப்பகுதியிலிருந்து 36 குடும்பங்களைச் சேர்ந்த 153 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக , ஹப்புத்தளை பிரதேச செயலாளர் சுனில் அபேகோன் தெரிவித்தார்.
அப்பகுதியில் மக்கள் வசித்துவரும் நான்கு லயன் குடியிருப்புகளின் மீது, பாரிய கற்பாறைகளுடன் மண்மேடு சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ள குடும்பங்கள், கல்கந்தை வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அக்குடும்பங்கள், மண்சரிவு ஏற்படக்கூடிய அதி அபாய வலயத்தில் வசிப்பதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் ஏற்கெனவே அறிவித்துள்ளதாகவும் இவர்களில் 16 குடும்பங்கள் ஏற்கெனவே பாதுகாப்பான இடமொன்றில் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மீதமுள்ள குடும்பங்களையும் பாதுகாப்பான இடங்களில் நிரந்தரமாகக் குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்










