மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு சலுகை விலையில் கோதுமை மா விற்பனை செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்து உள்ளது. மலையக மக்களின் பிரச்சினையை கோதுமை மாவுக்குள்ளேயே மட்டுப்படுத்தும் அரசாங்கங்களின் போக்கு மாற வேண்டும். மலையகப் பெருந்தோட்ட மக்களின் பொருளாதார நிலை குறித்து அரசாங்கம் உண்மையாக அக்கறை கொள்ளுமாக இருந்தால் வர்த்தமானி அறிவித்தலின் பிராகரம் நாளொன்றுக்கான ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தையே உறுதி செய்ய வேண்டும் என முன்னாள் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரசாங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.
ஜனவரி முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சலுகை விலையில் கோதுமை மாவை விற்பனை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். காலங்காலமாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் மலையகப் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினை கோதுமை மாவுடனேயே புரிந்து கொள்கின்றமை மனவருத்ததுக்கு உரியது.
2005 மகிந்த சிந்தனையில் இருந்து இன்று 2021 சௌபாக்ய தெக்ம வரை பல திட்டங்களிலும் இந்த கோதுமை கோதாவலேயே இருக்கிறார்கள்.
இந்த அரசாங்கம் தனது ‘சௌபாக்ய தெக்ம’ கொள்கைத் திட்டத்தில் மலையகப் ய் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை நாளாந்தம் பெற்றுக் கொடுக்க உறுதி அளித்தது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் அரச வர்த்மானி மூலம் அதனை பிரகடனம் செய்தாலும் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் நாளாந்தம் கிடைப்பதை அரசாங்கம் இதுவரை உறுதி செய்யவில்லை.
இதனால் தொழிலாளர்களின் தொழில் பல உரிமைகள் பாதிக்கப்பட்டு மிகுந்த துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்க தலைவர்களோ அரசாங்க வர்த்தமானியை உரிய முறையில் நடைமுறைப்படுத்துமாறு அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு மாறாக, மீண்டும் கூட்டு ஒப்பந்தம் எனும் அடிமை சாசனத்தைக் கொண்டுவரவே துடிக்கின்றனர்.
இந்த நிலையில் ஆயிரம் ரூபா நாள் சம்பளம் உரிய வகையில் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உள்ளது. அதைவிடுத்து கோதுமை மாவின் விலையைக் குறைத்து மக்களின் பொருளாதார நிலையையும் வாழ்க்கைத்தரத்தையும் மலினப்படுத்தும் வேலைகளை அரசாங்கம் கைவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
