” சஜித்தின் தலைமைத்துவத்துக்கு நம்பிக்கை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிய கட்சியின் செயல் தவறானதொன்றாகும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்படடியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இரு மாத கால விடுமுறையின் இருக்கின்றேன். கட்சியின் உள்ளக தகவல்கள் குறித்து சரியாக தெரியாது. எனினும், கட்சிக்குள் முரண்பாடுகளும் இல்லை என்பதை தெளிவாகக்கூறிக்கொள்கின்றேன். சஜித்தான் எமது தலைவர்.கட்சிக்குள் முரண்பாடும் இல்லை. இவ்வாறான நிலையில் எதற்கு தலைமைத்துவத்துக்கு நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இது தவறான செயல். மக்கள் மத்தியில் வீண் அச்சத்தை உருவாக்கும். கூட்டத்தில் நான் பங்கேற்றிருந்தால் அது தொடர்பில் கேள்வி எழுப்பியிருப்பேன்.
ரணில் விக்கிரமசிங்கவுடன் நான் இணையவுள்ளதாக வெளியாகும் தகவல் தவறானதாகும். என்னை அரசியலுக்கு அழைத்துவந்து அமைச்சரவை அந்தஸ்த்து உள்ள அமைச்சு பதவி வழங்கி, முதலமைச்சராக்கியது அவர்தான். இதனால் அவர்மீது இன்றளவிலும் மதிப்பு உள்ளது. இருந்தாலும் கட்சி தாவும் அரசியல் என்னிடம் கிடையாது, ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கினோம். அக்கட்சியுடன் பயணம் தொடரும்.
ஆட்சியை கவிழ்க்க வேண்டுமெனில் எதிரணிகள் ஒன்றுபடவேண்டும். தனியே செல்லலாம் என ஐக்கிய மக்கள் சக்தியோ, ஐக்கிய தேசியக்கட்சியோ நினைத்தால் அது தவறு. ” – என்றார்.