சஜித்தை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு சிறிதரன் போர்க்கொடி
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு தமிழரசுக் கட்சி எடுத்துள்ள முடிவுடன் உடன்பட முடியாது – என்று அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கவுள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சி இறுதித் தீர்மானத்தை எடுத்துள்ளது.
வவுனியாவில் இன்று (16.09.2024) காலை கட்சியின் அரசியல் பிரதிநிதிகள் மத்தியில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேற்படி தகவலை வெளியிட்டார்.
எனினும், இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், அந்தக் கருத்தில் தமக்கு எள்ளளவும் உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் எவரும் முன்வராத பின்னணியில் தமிழ் மக்களுக்காக நின்ற தமிழ் பொதுவேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றைய கூட்டத்தில் ஐந்து பேர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அது தொடர்பாக ஒரு அறிக்கையும் எழுதப்பட்டிருந்தது.