நாட்டில் சட்டவிரோத ஆயுதங்கள் பற்றிய தகவல் வழங்குவோருக்கு பணப்பரிசு வழங்கப்படுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்களின் மூலம் சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் கைக்குண்டுகள் நாடு முழுவதிலும் புழக்கத்திலிருப்பதால் பொலிஸ் திணைக்களம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில், உளவுத் தகவல் வழங்குவோரை ஊக்குவிக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை மேல் மற்றும் தென் மாகாணங்களில் இடம்பெற்று வரும் படுகொலைகளுக்காக உபயோகப்படுத்தப்படும் சட்ட விரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை கைப்பற்றும் விசேட செயற் திட்டம் நேற்று (25) முதல் ஜூலை (30) வரை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
தகவல்களை வழங்கும் நபர்களுக்கு பொலிஸ் மா அதிபரின் நிதியத்திலிருந்து பணமாக சன்மானங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ள குற்றச்செயல்கள் தொடர்பில், விசாரணைகளை நடத்தும்போது சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளே உபயோகப்படுத்தப்பட்டுள்ளமை தெரிய வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந் நிலைமையானது சட்ட ஆதிக்கத்தை நிலை நாட்டுவதிலும் அச்சமின்றி மக்கள் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதிலும் பெரும் தடையாக அமைந்துள்ளது.
இந்த வகையில் இது போன்ற சட்டவிரோத துப்பாக்கிகள் மட்டும் கைக்குண்டுகளை கைப்பற்றும் நடவடிக்கைகளை தீவிரப் படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர், அது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பொலிஸ் மாஅதிபர் இந்த சன்மானத் தொகை பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் ஜூலை (31) வரை மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புகள் மற்றும் கைதுகளுக்குமே இவ்வாறு சன்மானம் வழங்கப்படவுள்ளது.
சந்தேக நபருடன் கைப்பற்றப்படும் துப்பாக்கிகளில் ரி 56 துப்பாக்கி ஒன்றுக்காக பொலிஸ் உத்தியோகத்தருக்கு இரண்டரை இலட்சம் ரூபாவும் தகவல் தருபவருக்கு இரண்டரை இலட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
அத்துடன் ரிபீட்டர் துப்பாக்கிக்காக பொலிஸாருக்கு 50 ஆயிரம் ரூபாவும், தகவல் தருவோருக்கு 50 ஆயிரம் ரூபாவும், கைத்துப்பாக்கி ஒன்றுக்காக பொலிஸாருக்கு ஒன்றரை இலட்சம் ரூபாவும் தகவல் தருபவருக்கு இரண்டரை இலட்சம் ரூபாவும் ரிவோல்வர் துப்பாக்கிக் காக பொலிசாருக்கு ஒன்றரை இலட்சம் ரூபாவும் தகவல் தருபவருக்கு இரண்டரை இலட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
வெளிநாடுகளில் உற்பத்தி செய்துள்ள வேறு தானியங்கி துப்பாக்கிக்கு பொலி ஸாருக்கு ஒன்றரை இலட்சம் ரூபாவும் தகவல் தருபவருக்கு இரண்டு இலட்சம் ரூபாவும் வழங்கப்பட வுள்ளது.
அத்துடன் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் தோட்டா துப்பாக்கி ஒன்றுக்காக பொலிஸாருக்கு 25 ஆயிரம் ரூபாவும் தகவல் தருபவருக்கு 15,000 ரூபாவும் அதேவேளை வெளிநாட்டு உற்பத்தியான கைக்குண்டுக்கு பொலிஸாருக்கு 25 ஆயிரம் ரூபாவும் தகவல் தருபவருக்கு 25,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.










