சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் சென்னை தொழிலதிபர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலைகளின் தங்க கவசம் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடு ஆகியவை திருடப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக எஸ்ஐடி விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பத்ம குமார் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கு விசாரணையின்போது சபரிமலை ஐயப்பன் கோயில் துவார பாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசிய சென்னையை சேர்ந்த ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பங்கஜ் பண்டாரி நேற்று கைது செய்யப்பட்டார்.
துவார பாலகர் சிலைகளில் இருந்து திருடப்பட்ட தங்கத்தை கர்நாடகாவின் பெல்லாரியை சேர்ந்த ஜூவல்லரி உரிமையாளர் கோவர்தன் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
அவரும் கைது செய்யப்பட்டு உள்ளார். இருவரையும் அதிகாரிகள் திருவனந்தபுரத்துக்கு அழைத்து சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக அமுலாக்கத் துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில் நேற்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
“சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பாக அமுலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தலாம். இதுதொடர்பான எப்ஐஆர் உட்பட அனைத்து ஆவணங்களையும் அமலாக்கத் துறைக்கு எஸ்ஐடி அதிகாரிகள் வழங்க வேண்டும்” என்று உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டது.
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் அரசு, சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில் பல்வேறு உண்மைகளை மறைத்து வருவதாக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
தற்போது மத்திய புலனாய்வு அமைப்பான அமுலாக்கத் துறை களமிறங்கியிருப்பதால் பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.










