சபரிமலை ஐயப்பன் யாத்திரையை புனித யாத்திரையாக அறிவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்து கலாசார அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல், பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போதே மேற்படி பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இக்கலந்துரையாடலின் போது இந்து கலாசார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான பல விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
அதில் பிரதமரின் இணைப்பு செயலாளரும், இ.தொ.காவின் உப தலைவருமான செந்தில் தொண்டமான், சபரிமலை செல்லும் ஐயப்பன் யாத்திரையை இலங்கை அரசால் புனித யாத்திரையாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
இது தொடர்பாக பல ஆவணங்கள் கடந்த காலங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்பதையும் செந்தில் தொண்டமான், பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
அதனை தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இந்து கலாசார திணைகளத்திற்கு, சபரிமலை ஐயப்பன் யாத்திரையை புனித யாத்திரையாக அறிவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்தார்.










