சபாநாயகர் அரசமைப்பை மீறிவிட்டார் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வதற்கு அனுமதி வழங்கியதன் ஊடாக சபாநாயகர் அரசியலமைப்பை மீறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (11) சபையில் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

” 1982 இல் ரெலோவின் தலைவரான குட்டி மணி என்றழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரனின் பெயர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டது. அவரின் பெயரை தேர்தல் ஆணையாளர் வர்த்தமானியிலும் அறிவித்தார்.அது தொடர்பில் நாடாளுமன்ற செயலாளருக்கும் கடிதம் அனுப்பட்டிருந்தது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த குட்டி மணிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு எதிராக அவர் மேன்முறையீடும் செய்திருந்தார். எனினும், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வதற்கான வாய்ப்பை அப்போதைய சபாநாயகர் பாக்கீர் மாக்கார் வழங்கவில்லை. அரசியலமைப்பின் 89 மற்றும் 91 ஆவம் சரத்துகளுக்கமையவே அன்று சபாநாயகர் கொள்கை அடிப்படையில் இந்த முடிவை எடுத்து சிறந்த முன்னுதாரணத்தை வழங்கினார்.

இவ்வாறு வழங்கப்பட்டிருந்த முன்னுதாரணத்தையும், அரசியலமைப்பின் 89 மற்றும் 91 ஆம் சரத்துகளையும் மீறியே நீங்கள் (சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன) அண்மையில் தீர்மானம் எடுத்துள்ளீர்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய அதேவேளை அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டிய கடப்பாடும் சபாநாயகருக்கு இருக்கின்றது.” – என்றார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர்,

” மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்மானத்தின் பிரகாரமே நாம் செயற்பட்டோம்.” – என்றார்.
எனினும், நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும் சுயாதீனமாக முடிவெடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இருக்கின்றது என சஜித்தும், லக்‌ஷ்மன் கிரியல்லவும் சுட்டிக்காட்டினர். சபாநாயகராக இருந்த அனுர பண்டாரநாயக்கவால் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் சுட்டிக்காட்டினர்.

Related Articles

Latest Articles