சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளமையால் இம்மாகாணத்தில் கடுமையான கட்டுப்பாடுகளுக்கான துரித ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் அத்தியட்சகர் கபில கன்னங்கர தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாணத்தின் கொவிட் 19 ஏற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு தகவல் தருகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தகவல் தருகையில் சப்ரகமுவ மாகாணத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. இது இப்பிரதேசத்தில் கொரோனா தாக்கத்தின் துரிதத்தை அடையாளப்படுத்துகிறது.
நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட 80 கொரோனா நோயாளர்களுக்கு றம்புக்கன அரச வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மேலதிகமாக இம்மாகாணத்தில் மேலும் 5 சிகிச்சை மையங்களை இறக்குவானை, கிலீமலை, உந்துகொட, பெலிகல, கிதுல்கலை ஆகிய பிரதேச வைத்தியசாலைகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி அனைத்துக் கொரோனா சிகிச்சை மையங்களும் தனியான கட்டிடங்களில் மிகவும் பாதுகாப்பான சூழலில் உள்ளதாகவும் அவர் தெரிவித் தார்.