இளைஞனை தாக்கி, அது தொடர்பான காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பகிரங்கப்படுத்தி அவரது மரணத்துக்கு காரணமாக இருந்தவர்கள் இதுவரை கைது செய்யப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்களை உடன் கைது செய்யுமாறு வலியுறுத்தியும் கொத்மலை பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று (16.09.2025) போராட்டம் இடம்பெற்றது.
தவலாந்தன்ன சந்தியில் இருந்து கொத்மலை பிரதேச செயலக வளாகம் வரை சுமார் 3 கிலோ மீற்றர் தூரம் பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள், இளைஞனின் மரணத்துக்கு நீதி வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். பதாகைகளையும் தாங்கி இருந்தனர்.
கொழும்பில் இருந்து புசல்லாவை, ரொச்சைல்ட் பகுதியிலுள்ள தமது வீட்டுக்கு பேருந்தில் வந்த இளைஞன் ஒருவர், நித்திரையால் இடம்மாறி இங்கிவிட்டார்.
அவரை திருடன் என நினைத்து சிலர் தாக்கி இருந்தனர். அது தொடர்பான படங்கள், காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாக இருந்தன.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான இளைஞன், தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே இச்சம்பவம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தி ரொச்சைல்ட் தோட்டப் பகுதியில் இருந்து கொத்மலைக்கு வந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் இடம்பெற்ற பிரதேச செயலக வளாகத்துக்கு கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரத்நாயக்க வருகை தந்திருந்தார். போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடி, பதற்ற நிலைமையை கட்டுப்படுத்தினார்.
நடத்தியவர்களில் ஏழு பேருக்கு பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. இதன்போது சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.