மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்கப்பெற வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். அதற்காக முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களுக்கு நாம் என்றும் எதிராக நின்றதில்லை என்று ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான அ. அரவிந்தகுமார் தெரிவித்தார்.
அத்துடன், சம்பள உயர்வு போராட்டம் தொடர்பில் எம்முடனும் கலந்துரையாடி கூட்டாக நடவடிக்கையில் இறங்கினால் அது போராட்டத்துக்கு மேலும் வலுசேர்க்கும் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ சம்பள உயர்வு தொடர்பில் அனைவரின் ஆதரவுடன் போராட்டம் நடைபெற்றால் அது சிறப்பாக அமையும். நேற்றைய போராட்டம் பற்றி எம்முடன் கலந்துரையாடப்படவில்லை. அவ்வாறு கலந்துரையாடி இருந்தால் முழு ஆதரவை வழங்கி இருக்க முடியும் என்றே நான் கூறி இருந்தேன். மாறாக நியாயமான விடயங்களுக்காக இடம்பெறும் போராட்டங்களை நாம் எதிர்ப்பதில்லை. அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் நலன் கருதியே செயற்படுகின்றன.
கூட்டு ஒப்பந்தத்தில் நாம் அங்கம் வகிக்காவிட்டாலும், தொழிலாளர்களுக்குரிய சம்பள பிரச்சினைவரும்போது நாம் தொழிலாளர்கள் பக்கமே நிற்போம். அவர்களுக்கு சம்பள உயர்வு அவசியம் என்பது நியாயமான கோரிக்கையாகும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபா வழங்கப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதியும், அரசாங்கமும் உறுதியாக இருக்கின்றது. இந்த முன்மொழிவு ஜனாதிபதியின் பாதீட்டு உரையின்போதும் முன்வைக்கப்பட்டது. ” – என்றார்.
ராமு தனராஜ்










