“ சம்பள பிரச்சினையை மாத்திரம் கூறி மலையக மக்களை முடக்கி வைக்க முடியாது.” – என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டி மாவட்ட தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கங்கள் மற்றும் இளைஞர் தலைவர்களுடன் இன்று (10) கண்டி கரலிய மண்டபத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜீவன் மேலும் கூறியவை வருமாறு,
“ எனக்கு கெபினட் அமைச்சு பதவி வழங்கப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. இந்த காலப்பகுதியில் என்னால் முடிந்த வரையில் சேவைகளை செய்திருக்கிறேன். கண்டி மாவட்டத்திற்காக மாத்திரம் 160 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கண்டி மாவட்டத்திற்கு இந்தளவு நிதி ஒதுக்கப்பட்டதில்லை.
அதேபோல் கண்டியிலும் பதுளையிலும் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையங்களை அமைக்கவுள்ளோம். அதற்காக இந்திய அரசாங்கத்தின் உதவியை கோரியுள்ளோம். 10 இலட்சம் தோட்ட மக்கள் உள்ளனர். அவர்களில் ஒரு இலட்சத்து பதினைந்தாயிரம் பேர் மட்டுமே தோட்ட தொழில் செய்கின்றனர்.
தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 சம்பள அதிகரிப்பு வழங்குவதை விரும்பவில்லை. சம்பள பிரச்சினையை மாத்திரம் கூறி மலையக மக்களை முடக்கி வைக்க முடியாது. சம்பள விடயத்திற்கு மேலாக ஜனாதிபதி மலையகத்தின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்களை செயற்படுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், சம்பள அதிகரிப்புக்குத் தேவையான சகல முயற்சிகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. பெருந்தோட்ட நிறுவனங்கள் தற்போது சம்பள அதிகரிப்புக்கு இணங்கியுள்ளனர். ஜனாதிபதி தலைமையில் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளது.” – என்றார்.