பத்தாவது சர்வதேச யோகா தின நிகழ்வுகள் இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் அதன் கலாசார பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் 2024 ஜூன் 22 ஆம் திகதி கொழும்பில் உள்ள தனித்துவமிக்க காலி முகத்திடலில் நடைபெற்றிருந்தது.
தனி நபர்களுக்கும் சமூகத்துக்கான யோகா என்ற தொனிப் பொருளில் இந்த பத்தாவது சர்வதேச யோகா தினம் அனுஷ்டிக்கப்பட்டதுடன் அன்றைய தினம் பலநூற்றுக்கணக்கான யோகா ஆர்வலர்கள் அந்நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர்.
சிறப்பு விருந்தினர்களான கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜெயந்த, நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் பிரதீப் ரத்னாயக்கே, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி நந்தலால் வீரசிங்க ஆகியோர் மற்றும் ஏனைய பிரமுகர்கள் சகிதம் உயர் ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஷ் ஜா அவர்களும் இந்த யோகா நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.
இரத்மலானை பரம தம்ம சைத்ய பிரிவேனாவின் தலைமை குரு சங்கைக்குரிய கலாநிதி மைதபே விமலசார மகா தேரர் அவர்கள் நிகழ்வின் ஆரம்பத்தில் சகலரதும் நலனுக்காக புத்தபெருமானை வேண்டி பிரார்த்தித்த நிலையில் இந்நிகழ்வுகள் காலி முகத்திடலில் ஆரம்பித்திருந்தன அத்துடன் யோகா மற்றும் தியானம் ஆகியவற்றின் சங்கமமாக இடம்பெற்ற இந்நிகழ்வில இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த 25 முன்னணி யோகா நிலையங்களின் நிபுணர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
மயூராபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய அறநெறிப்பாடசாலை மாணவர்களின் சிறப்பு யோகா அமர்வும் இங்கு இடம்பெற்றிருந்தது.
காலிமுகத்திடலில் நடைபெற்ற யோகா அமர்வுடன் சுவாமி விவேகானாந்தா கலாசார நிலையம் நடத்திய 10 நாள் யோகா மஹோற்சவம் நிறைவடைந்துள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டையில் உள்ள கொன்சுலேட் ஜெனரல் காரியாலயங்கள் மற்றும் கண்டியில் உள்ள துணை உயர் ஸ்தானிகராலயம் ஆகியவை ஒழுங்கமைத்திருந்த நிகழ்வுகளுக்கு மேலதிகமாக இந்நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
இவற்றின் தொடர்ச்சியாக இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களின் பின்னணியில் கிட்டத்தட்ட 100 நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டன. கொழும்பு தேசிய நூதனசாலை, ஜெய ஸ்ரீ மஹா போதி, சிகிரியா, ராவணன் நீர்வீழ்ச்சி, சீதா அம்மன் கோயில், நெடுந்தீவு, கிரகரி ஏரி, காலி கோட்டை, யாழ்ப்பாணக் கோட்டை, தெய்வேந்திர முனை கலங்கரை விளக்கம் உள்ளிட்ட சில முக்கிய இடங்களில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிகழ்வுகளுக்கு இலங்கை அரசின் சுற்றுலா அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு ஆகியவை அனுசரணை வழங்கியிருந்தன.
இந்தியாவின் முன்மொழிவுக்கு அமைவாக 2014இல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் ஒவ்வொரு வருடமும் ஜூன் 21 ஆம் திகதியை சர்வதேச யோகா தினமாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 170 க்கும் அதிகமான நாடுகள் இத்தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கிய நிலையில் இணை அனுசரணை வழங்கிய நாடுகளில் இலங்கையும் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.