சர்வதேச விதிகளை மீறியுள்ளது ரஷ்யா: நீதிமன்றம் தீர்ப்பு! 

உக்ரைனுக்கு எதிரான போரில், சர்வதேச விதிகளை ரஷ்யா மீறியுள்ளது என, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் உள்ள ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம், நேற்று இரண்டு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியது.

உக்ரைன், நெதர்லாந்து ஆகியவை, ரஷ்யாவிற்கு எதிராக தொடுத்த வழக்குகளை இந்த நீதிமன்றம் விசாரித்து வந்தது.

உக்ரைன் மீதான போர் ஆரம்பித்ததில் இருந்து முழு அளவிலான படையெடுப்பின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த வழக்கு ஒன்றாகும்.

அத்துடன், 2014ஆம் ஆண்டு 298 உயிர்களை பலிவாங்கிய மலேஷியா ஏர்லைன்ஸ் விமானம் எம். எச் 17 சுட்டு வீழ்த்தப்பட்ட விடயம் குறித்த வழக்காகும்.

கடந்த 2014ல் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு சென்ற மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானம், ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் உக்ரைன் படைகளுக்கும் இடையே சண்டை நடந்து கொண்டிருந்தபோது கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த விமானத்தில் 196 நெதர்லாந்து பயணியர் உட்பட 298 பேர் இருந்தனர்.
இந்த இரண்டு வழக்குகளிலும், சர்வதேச விதிகளை ரஷ்யா மீறியுள்ளதாக, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் கூறியுள்ளது.

கடந்த, 2022ல் நீதிமன்றத்தின் நிர்வாக அமைப்பு, ரஷ்யாவை நீக்கி உத்தரவிட்டது. அதனால் தற்போதைய உத்தரவுகள், ரஷ்யாவை கட்டுப்படுத்தாது.

எனினும், முழு விசாரணை நடந்துள்ளதால், ரஷ்யா மீது ஐ.நா., மனித உரிமை ஆணைக்குழு உள்ளிட்டவற்றில் தொடரப்பட்டுள்ள வழக்குகளில், இந்த உத்தரவு தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதேவேளை, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் உத்தரவை ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளது.

என்.எச் 17 விமானத்தில் 38 ஆஸ்திரேலியர்கள் பயணித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது எக்ஸ் தள பதிவில் இவ்விடயத்தை நினைவுகூர்ந்துள்ளார் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங்.

Related Articles

Latest Articles