சஹ்ரான் குழுவின் உறுப்பினரான புலஸ்தினி மகேந்திரன் எனப்படும் சாரா ஜஸ்மினை நாட்டுக்கு கொண்டுவருவதற்குரிய திறந்த பிடிவிராந்து ஏன் இன்னும் பெறப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறுகேள்வி எழுப்பினார்.
“ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சஹ்ரான் குழவில் இருந்தவர்தான் சாரா ஜஸ்மின்.
கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிகாலத்தல் மூன்றாவது முறையாக முன்னெடுக்கப்பட்ட டிஎன்ஏ பரிசோதனை மூலம்தான் அவர் உயிரிழந்துவிட்டார் எனக் கூறப்பட்டது.
சாரா ஜஸ்மின் உயிரிழக்கவில்லை என்றே நான் நம்புகின்றேன். அவர் தப்பி சென்றிருக்கக்கூடும் அல்லது அவர் தப்பிச்செயல்வதற்கு குழுவொன்று உதவி இருக்கக்கூடும்.
சாரா ஜஸ்மின் உயிரிழக்கவில்லை என்பதை உங்கள் அரசாங்கமும் ஏற்கின்றது. இந்தியாவில் இருக்கின்றார் எனவும் கூறப்பட்டது. எனவே, சாரா ஜஸ்மினை கொண்டுவருவதற்கு ஏன் இன்னும் திறந்த பிடிவிராந்து பெறப்படவில்லை?
இந்தியாவுடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நெருக்கமாக செயல்படுகின்றது. இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள் இலங்கை வந்திருந்தனர். இது பற்றி அவர்களுடன் பேசப்பட்டதா?” – எனவும் முஜிபூர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.
