சின்ன துரையை உடன் பதவி நீக்கவும் – ராதா வலியுறுத்து

மாத்தளை, ரத்வத்தை – கீழ்ப்பிரிவு தோட்டத்தில் தோட்ட துரை ஒருவர் அடாவடித்தனமாக நடந்துகொண்ட விடயம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இனியும் எம்மக்களை அடிமைகளாக நினைத்து அடாவடி செய்வதை ஒருநாளும் மக்கள் பிரதிநிதியான எமக்கு பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எனவே குறித்த தோட்ட உதவி முகாமையாளரை உடன் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

” இவ்வாறான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கடந்த பாராளுமன்ற விவாதத்தில் விவாதித்த போதும் கூட இவ்வாறான சம்பவங்கள் தோட்டங்களில் இடம்பெறுகின்றன. இதுபோல வெளிவாரத பல அநியாயங்கள் பல தோட்டங்களில் எம் மக்களுக்கு இடம்பெறுகின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தோட்டத்துரை, பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென பெருந்தோட்ட அமைச்சர் ரமேஸ் பத்திரண கூறியுள்ளார். எமக்கு தேவை மன்னிப்பு கிடையாது , உடனடியாக சம்மந்தப்பட்ட துரை பணி நீக்கம் செய்யப்பட வேண்டுமெனவும் அமைச்சர் ரமேஸ் பத்திரணவிடம் தொலைபேசி மூலம் வலியுறுத்தினேன். அதை செய்ய காலம் தாமதிக்கும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

நிருபர் நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles