சிறந்த கொழுந்து பறிப்பாளர் தேர்வு!

ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின்கீழ் பணியாற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கிடையில் நடத்தப்பட்ட கொழுந்து பறிக்கும் போட்டியில் தலவாக்கலை கிரேட் வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த எந்தனி இரேஷா ராஜலெட்சுமி முதலிடம் பிடித்தார்.

15 நிமிடங்களுக்குள் 8 கிலோ கொழுந்து பறித்து முதலாம் இடம்பிடித்து தங்க பதக்கம் வென்ற அவருக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணப்பரிசும், தொலைக்காட்சியொன்றும் வழங்கப்பட்டது.

ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுள், சிறந்த கொழுந்து பறிப்பாளரை தெரிவுசெய்வதற்கான இறுதிப் போட்டி நானுஓயா ரதல்ல தேயிலை மலையில் இன்று நடைபெற்றது.

ஹேலிஸ் நிறுவனத்தின் முகாமைத்துவத்துக்குட்பட்ட ஹொரண, தலவாக்கலை மற்றும் கௌனிவெலி ஆகிய பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழுள்ள 60 தோட்டங்களில் ஆரம்பகட்ட போட்டிகள் நடைபெற்றன.

அவற்றில் வெற்றி பெற்றவர்களில் இருந்து 50 பெண் தொழிலாளர்கள் இறுதிப் போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கிடையில்தான் இன்று போட்டி நடத்தப்பட்டது.

இப்போட்டியில் தலவாக்கலை, பெருந்தோட்ட நிறுவனத்தின் கிரேட் வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த அந்தனி இரேஷா ராஜலெட்சுமி முதலிடத்தை பெற்றார். அவர் மூன்று பிள்ளைகளின் தாய் ஆவார். அவரின் கணவர் கொழும்பில் பணிபுரிகின்றார் என்பதோடு, 18 வருடங்கள் இந்த பெருந்தோட்டத்துறையில் பணியாற்றிவருகின்றார்.

பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக ஹேலிஸ் நிறுவனத்தின் தலைவர் மொஹான் பன்டித்தகே, நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரொஷான் ராஜதுரை ஆகியோர் கலந்துகொண்டனர். நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

மூன்று பெருந்தோட்ட நிறுவனங்களிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு பதக்கமும், பணப்பிரிசும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்

Related Articles

Latest Articles