சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் ஆரம்பிக்கப்பட்டது முதல் அப்பிரதேசத்தில் அதிகமான பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் கழிவுப் காணப்படுவதாக சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புக்கள் கவலை தெரிவித்துள்ளன.
இரத்தினபுரி, பெல்மதுளை, குருவிட்ட பகுதிகளிலிருந்தும் ஏனைய பிரதான பாதைகளூடாகவும் சிவனொளிபாத மலைக்கு யாத்திரைக்காக வரும் உள்நாட்டு யாத்திரிகர்களால் இந்தப் பாதிப்பு ஏற்படுவதாக மேற்படி அமைப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றன.
இப்பகுதியில் ஏற்படும் சுற்றாடல் பாதிப்புடன் சுகாதார ரீதியிலான பாதிப்புக்களும் பாரதூரமானவை என அவ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இப்பகுதிக்கு வருகைதரும் பொதுமக்களில் அநேகர் சட்ட திட்டங்களை மதிக்காமையும் இலட்சக்கணக்கான மக்களை அவதானிப்பதில் எதிர்கொள்ளும் நடைமுறைக் கஷ்டங்களும் இந்நிலைமையை பல மடங்கு அதிகரிப்பதாக இவ்வமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
சட்ட திட்டங்களால் மாத்திரம் மேற்படி ஒழுங்குகளை முறைப்படுத்த முடியாதெனவும் மனப்பாங்கு ரீதியாக பொது மக்கள் சுயகட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டால் மட்டுமே இம்முயற்சிகள் சாத்தியமடையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யாத்திரைப் பிரதேசத்துக்குள் உட் பிரவேசிக்கும் யாத்திரிகர்களுக்கு பொருத்தமான சுற்றாடல் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படல் அவசியம் எனவும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.