சீன ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்திய பிரதமர் மோடி, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்யை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஏழு ஆண்டுகளுக்கு பின் நேற்று சீனா சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின், அங்குள்ள ஹோட்டலுக்கு சென்ற பிரதமரை வரவேற்கும் விதமாக, இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

சீனாவின் தியான்ஜின் நகரில் இன்றும், நாளையும் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில், அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங்யை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

கடந்த 2020ல், ஜம்மு – காஷ்மீரின் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன படைகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதை அடுத்து, இருநாட்டு உறவும் பாதிக்கப்பட்டது.

பல கட்ட பேச்சைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் இருநாட்டு வீரர்களும் ரோந்து பணியில் ஈடுபடலாம் என கடந்தாண்டு முடிவு செய்யப்பட்டதை அடுத்து மோதல் முடிவுக்கு வந்தது.இந்த சூழலில், சீன அதிபர் ஷீ ஜின்பிங் உடன் பிரதமர் மோடி இன்று பேச்சு நடத்தினார்.

எல்லைப் பிரச்னையில் சுமுக முடிவு காண இருவரும் ஆலோசனை நடத்தியதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
முன்னதாக 2024ம் ஆண்டு ரஷ்யாவின் கசானில் நடந்த பிரிக்ஸ் அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன ஜனாதிபதியும் சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles