சீனாவின் டீப்சீக் ஏஐ சாட்பூட் செயலிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால் அமெரிக்க பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டு, உலக கோடீஸ்வரர்களுக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டது.
சீனாவின் ஸெஜியாங் மாகாணம் ஹாங்சூ நகரில், லியாங் வென்பெங் என்பவரால் கடந்த 2023-ம் ஆண்டு டீப்சீக் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கப்பட்டது.
இரண்டே ஆண்டுகளில் இந்நிறுவனம், டீப்சீக்-ஆர்1 என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு சாட்பூட் செயலியை கடந்த 10-ம் திகதி அறிமுகம் செய்தது. ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி-க்கு நிகரான சேவையை இது வழங்குகிறது.
நவீன ஏஐ செயலி உருவாக்குவதை கட்டுப்படுத்தும் வகையில் சீனாவுக்கு என்விடியா சிப்களை வழங்க அமெரிக்கா தடை விதித்திருந்தது. ஆனாலும், ஓபன் ஏஐ, ஆல்பபெட், மெட்டா ஆகிய நிறுவனங்களின் சாட்பூட் செயலியுடன் ஒப்பிடும்போது, குறைவான செலவிலும குறைவான வளங்களையும் பயன்படுத்தி டீப்சீக்-ஆர்1 செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
அறிமுகம் செய்யப்பட்டு 2வாரங்களே ஆன நிலையில், அமெரிக்காவில் சாட்ஜிபிடியை மிஞ்சி, ஐஒஎஸ் ஆப் ஸ்டோர் மூலம் அதிக அளவில் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக டீப்சீக் உருவெடுத்துள்ளது.
இதன் காரணமாக அமெரிக்க பங்குச் சந்தைகள் நேற்று முன்தினம் கடுமையாக சரிந்தன. குறிப்பாக, என்விடியா பங்குகள் விலை ஒரே நாளில் 17 சதவீதம் சரிந்தது. இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரூ.52 லட்சம் கோடி சரிந்தது.