தாய்வானைச் சூழ சீனா பாரிய இராணுவ ஒத்திகை ஒன்றை பூர்த்தி செய்த அடுத்த நாளான நேற்று (11) அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் இணைந்து மிகப்பெரிய இராணுவ ஒத்திகை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
தாய்வான் ஜனாதிபதி அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகரை கடந்த வாரம் சந்தித்ததை அடுத்து சீனா, கடந்த மூன்று நாட்களாக தாய்வானை முடக்கும் வகையில் போர் ஒத்திகையை நடத்தியது.
இந்தப் போர் ஒத்திகையை அமெரிக்கா கண்டித்ததோடு, இது பொறுப்பற்ற செயல் என்றும் தமக்கு அமெரிக்கா செல்வதற்கு உரிமை இருப்பதாகவும் தாய்வான் ஜனாதிபதி ட்சாய் இன் வென் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்கா ஆரம்பித்திருக்கும் போர் ஒத்திகை முன்னர் திட்டமிட்டதாகும்.
இந்தோ–பசிபிக் பிராந்தியத்தில் திறந்த மற்றும் சுதந்திரமான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான தங்கள் அர்ப்பணிப்பை இந்தப் பயிற்சிகள் காட்டுவதாக பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
பிலிப்பைன்ஸுடனான வருடாந்த பலிகடான் ஒத்திகை தொடர்பில் அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்ததோடு இதுவரை நடந்ததில் மிகப்பெரியது என்றும் குறிப்பிட்டிருந்தது. இதில் அமெரிக்காவில் இருந்து 12,000 துருப்புகள் உட்பட 17,000க்கும் அதிகமான துருப்புகள் பங்கேற்கின்றன.
இரண்டு வாரங்கள் இடம்பெறும் இந்தப் போர் ஒத்திகையில் தென் சீன கடலில் போர் கப்பல்களை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்துவது போன்ற ஒத்திகைகளும் இடம்பெறவுள்ளன.
எனினும் தாய்வானை ஒட்டிய விவகாரத்துடன் தொடர்புபட்டதாக இந்தப் போர் ஒத்திகை இருக்காது என்று அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த பெப்ரவரியில் பிலிப்பைன்ஸுடன் அமெரிக்கா புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டதோடு அதில் போட்டி இருக்கும் நீர்ப்பகுதிக்கு அருகில் உள்ள பிலிப்பைன்ஸ் தீவுகளில் நான்கு புதிய கடற்படை தளங்களை அமைக்க ஒப்பந்தமாகியுள்ளது.
பிலிப்பைன்ஸ் மற்றும் தென் சீன கடல் பகுதியைக் கொண்ட நீர்ப் பாதை உலகின் மிகப் பெறுமதி மிக்க வர்த்தகப்பாதையாக இருப்பதோடு, அண்மைய ஆண்டுகளில் சீனா இதற்கு உரிமை கோரும் நிலையில் தற்போது பிரச்சினைக்குரிய பகுதியாக மாறியுள்ளது.










