சுதந்திர தினத்தில் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – அறுவர் பலி

அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் சுதந்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 4-ம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நாட்டின் 246-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தையொட்டி அந்நாட்டில் பல்வேறு மாகாணங்களில் சுதந்திர தின அணிவகுப்புகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஹைலண்ட் பூங்காவில் சுதந்திர தின அணிவகுப்பு அந்நாட்டு நேரப்படி நேற்றுக் காலை 10 மணிக்கு தொடங்கியது.

அப்போது, சுதந்திர தின அணிவகுப்பில் கலந்து கொண்டிருந்த ஒருவர் கூட்டத்தினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 30 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த பொலிஸார், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திய கொலையாளியான 22 வயதான இளைஞன் ஒரு மணி நேரத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்க மக்களின் இயல்பு வாழ்க்கையை சிதைக்கும் வகையில் அங்கு இடம்பெற்றுவரும் தொடர் துப்பாக்கி வன்முறைகளில் மிகச் சமீபத்திய சம்பவமாக இது பதிவாகியுள்ளது.

பாடசாலைகள், தேவாலயங்கள், வணிக வளாகங்களில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் பலர் கொல்லப்பட்ட நிலையில் சுதந்திர தின அணிவகுப்பில் நேற்று துப்பாக்கி வன்முறை இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் சுதந்திர தினக் கொண்டாட்டம் துப்பாக்கி வன்முறை என்ற கொடிய நோயால் சிதைக்கப்பட்டது என இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட இல்லினாய்ஸ் மாகாண ஆளுநர் ஜே.பி. பிரிட்ஸ்கர் கூறினார்.

சுதந்திர தின அணிவகுப்பு இடம்பெற்ற பகுதியில் ஒரு இடத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. அங்கு பலர் கூடியிருந்தனர். இதன்போது துப்பாக்கிதாரி கூட்டத்தினரை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார். இதில் 6 பேர் குண்டுபட்டு அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயமடைந்து சரிந்தனர். இதனையடுத்து கூட்டத்தில் இருந்தவர்கள் சிதறி ஓடினர்.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து துப்பாக்கிதாரி தப்பியோடி தலைமறைவானார். உடனடியாகத் தேடுதலில் இறங்கிய பொலிஸார் சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் வடக்கே ஐந்து மைல் தொலைவில் மறைந்திருந்த 22 வயதான கொலையாளியை கைது செய்தனர்.

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக துப்பாக்கிப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் முக்கிய சட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த மாத இறுதியில் கையெழுத்திட்டார்.

புதிய சட்டத்தின் கீழ், துப்பாக்கி வாங்க விரும்பும் இளையர்களின் பின்னணி தீவிரமாக ஆராயப்படும்.

அத்துடன், அச்சுறுத்தலாகக் கருதப்படும் தனிநபர்களை அடையாளங்கண்டு அவர்களிடமிருந்து துப்பாக்கிகளை மீட்டுக்கொள்ளும் முன்னெச்சரிக்கை சட்டங்களை இயற்ற மாகாண அரசுகளை அது ஊக்குவிக்கிறது.

இந்த சட்டம் நான் விரும்பும் அனைத்தையும் செய்யவில்லை. எனினும் உயிர்களைக் காப்பாற்ற நீண்ட காலமாக எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு இது வலுச்சேர்க்கும் என பைடன் ஒப்புக்கொண்டார்.

கடந்த மே மாதம் நியூயோர்க்கில் உள்ள பபேலோவில் உள்ள பல்பொருள் அங்காடி மற்றும் டெக்சாஸ் மாநிலத்தின் உவால்டேயில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 29 சிறுவர்கள் உட்பட மொத்தம் 31 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமெரிக்க அரசாங்கம் ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் சட்டத்தில் கையெழுத்திட்ட போது ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார்.

புதிய சட்டத்தின் கீழ் 21 வயதுக்கு குறைவானவர்கள் துப்பாக்கி வாங்குவது கடினமாக அமையும். அவர்கள் பின்னணி குறித்து தீவிரமாக ஆராயப்படும்.

உளநல மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பாடசாலைகளை துப்பாக்கி வன்முறைகளில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகளை முன்னெடுக்க புதிய சட்டத்தின் கீழ் 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மத்திய அரசின் நிதியுதவி கிடைக்கும்

அச்சுறுத்தலாக கருதப்படும் நபர்களிடம் இருந்து துப்பாக்கிகளை மீளப் பெறுவதற்கான சட்டங்களை செயற்படுத்த மாகாணங்களை ஊக்குவிக்க நிதி வழங்கப்படும்.

துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களில் தண்டனை பெற்ற அனைவரும் துப்பாக்கி வைத்திருப்பதைத் தடை செய்வதன் மூலம் குடும்ப மற்றும் சமூக வன்முறைகளை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் நம்பிக்கை வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles