ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தீ வைத்தது. அன்று ரணில் விக்கிரமசிங்கவை விமர்சித்தவர்கள், இன்று அவருடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளனர். இதன்மூலம் மொட்டு கட்சியின் ‘டபள்கேம்’ அம்பலமாகின்றது – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மைத்திரிபால சிறிசேன தீ வைத்தார், அதனால்தான் புதிய கட்சியை உருவாக்க வேண்டி ஏற்பட்டது என மொட்டு கட்சியின் செயலாளர் வெளியிட்ட கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே துமிந்த திஸாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மைத்திரிபால சிறிசேன அல்லர், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே , சுதந்திரக் கட்சிக்கு தீ வைத்தது. பிரதான இரு கட்சிகளை இணைத்து நாட்டை முன்னேற்றுவதற்காகவே ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் என்ற திட்டத்துக்கு மைத்திரி உடன்பட்டார். புதியதொரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாக இருந்தது.
அன்று ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சிசெய்தபோது, ரணிலுடன் எப்படி ஆட்சி செய்வது என கூறிவிட்டே கட்சியைவிட்டு வெளியேறி அவர்கள் மொட்டு கட்சியை உருவாக்கினார்கள். சுதந்திரக் கட்சிக்கு தீ வைத்தார்கள். கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்சவை மக்கள் விரட்டிய பின்னர், மொட்டு கட்சியை பாதுகாத்தக்கொள்ள ரணிலுடன் இணைந்தனர். அன்று வேண்டாம் என கூறிய ரணில் இன்று எப்படி வேண்டப்பட்டவரானார். இதன்மூலம் மொட்டு கட்சியினரின் இரட்டை நிலைப்பாடு தெளிவாகின்றது.” – என்றார்.










