பங்களாதேஷுக்கு எதிரான ஆசியக் கிண்ண குழுநிலைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியதன் மூலம் இந்தத் தொடரில் இலங்கை அணி ‘சுப்பர் போர்’ சுற்றுக்கு முன்னேற தெளிவான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (30) நடந்த போட்டியில் ஆப்கான் வெற்றி பெற்றதன் மூலம் அந்த அணி தொடரில் முதல் அணியாக சுப்பர் போர் சுற்றுக்கு முன்னேறியது. ஆப்கான் தனது முதல் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தியது.
இந்நிலையில் ஆப்கானிடம் இலங்கை மோசமான தோல்வியை சந்தித்ததால் நிகர ஓட்ட விகிதத்தில் பெரும் சரிவை பதிவு செய்து அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது கேள்விக் குறியான நிலையிலேயே இருந்தது. எனினும் பங்களாதேஷ் ஆப்கானிடம் தோற்றதால் இலங்கைக்கு எந்த நிபந்தனையும் இன்றி தனது கடைசி குழு நிலைப் போட்டியில் பங்களாதேஷை வீழ்த்தினால் போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று (01) டுபாயில் நடைபெறும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி ‘நொக் அவுட்’ ஆட்டம் ஒன்றாக மாறியுள்ளது. இந்த இரு அணிகளும் ஆப்கானிடம் தோற்றிருக்கு நிலையில் தனது பலவீனங்களை சரி செய்து இன்றைய போட்டியில் களமிறங்க எதிர்பார்த்துள்ளன.










