“சொந்த நாட்டில் முகவரி அற்ற மக்கள் இருக்கிறார்கள் என்றால் அது பெருந்தோட்ட மக்கள் மட்டுமே”

மலையக மக்களின் அடிப்படை மனித உரிமை மீறப்படுவதாகவும் இந்த நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் இறுதி மூச்சாக கருதப்படும் ஊழியர் சேமலாப நிதியிலேயேயும் அரசாங்கம் கை வைத்துள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மலையக மக்களுக்கு நிரந்தர முகவரி கேட்டு இந்த பாராளுமன்றத்தில் பேச கிடைத்ததை உண்மையில் ஒரு வேதனையான தருணமாக நான் கருதுகிறேன் என்று நேற்றைய தினம் பாராளுமன்றில் உரையாற்றுகையில் கூறினார்.

மலையக மக்களுக்கு முகவரி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்றில் நேற்று எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முன்வைத்த பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றிய மயில்வாகனம் உதயகுமார் மேலும் கூறுகையில்,

பிரஜா உரிமை பெற்று வாக்குரிமை உள்ள சொந்த நாட்டில் முகவரி அற்ற மக்கள் இருக்கிறார்கள் என்றால் அது மலையக பெருந்தோட்ட மக்கள் மட்டுமே ! இந்த நவீன யுகத்திலும் இவ்வாறான நிலைமையா ? இன்னும் இந்த அவல நிலை குறித்து பேசிக்கொண்டு தானே இருக்கிறோம். தீர்வு கிடைக்குமா? அல்லது பிரேரணையாக மாத்திரமே இருக்குமா? இதற்கு இந்த சபையில் உள்ள 225 பேரும் வேட்கி தலைகுனிய வேண்டும்.

சொந்த நாட்டில் அகதிகளாக இருக்கும் மக்களாகவே இதனை நோக்க முடிகிறது. 1823ம் ஆண்டு காலப் பகுதியில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மலையக மக்கள் இன்று தமது 200வது ஆண்டில் கால்பதித்துள்ளனர். அதுவும் நாட்டுக்காக ஓடாய் தேய்ந்து, பாடாய் பாடுபட்டு, உழைத்து – உழைத்து உருமாறிப் போன – முகவரி அற்ற சமூகமாக 200வது ஆண்டில் கால்பதித்துள்ளோம். 200 வருடங்களை கடந்துள்ள போதும் இன்னும் இந்த பெருந்தோட்ட மக்கள் வாழுகின்ற பிரதேசத்துக்கு நேரடி தபால் விநியோகம் இல்லாமையானது மிகப்பெரிய அவலமாகும்.

மலையக பகுதிகளில் சுமார் 500 தோட்டங்களில் 1500 பிரிவுகளில் காணி உரிமை அற்று, வீட்டு உரிமை அற்று முகவரி அற்ற மக்களாக வாழ்ந்துவருகின்றனர். 1987 ஆம் ஆண்டு 5ஆம் இலக்க உள்ளுராட்சி சட்டத்தில் நகரம், கிராமம் உள்வாங்ப்பட்டு, பெருந்தோட்டம் புறந்தள்ளப்பட்டிருந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க காலத்தில் பெருந்தோட்டத்துறையும் உள்வாங்கப்பட்டது. ஆகவே, பெருந்தோட்ட குடியிருப்புகளுக்கு முகவரி, விலாசம் வழங்ககூடிய சட்ட ஏற்பாடு முழுமையாக இருக்கிறது.

இதை செய்ய தவறியதன் காரணமாக சொந்த நாட்டில் வாழும் மக்களுக்கு முகவரி வழங்கக் கோரி உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 12 (1), 12 (2) மற்றும் 14(h) ஆகிய பிரிவுகளில் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் மீறப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது மலையக மக்களின் அடிப்படை மனித உரிமை இங்கு மீறப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பில் உயர் நீதிமன்றில் கருத்து வெளிட்டுள்ள சட்டமா அதிபர், மலையக மக்களுக்கு முகவரி வழங்குவது குறித்து பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் ஆராய்ந்து வருவதாக அறிவித்துள்ளார்.

முகவரி இல்லாத காரணத்தால் மலையக மக்களுக்கு விலாசமில்லாத கடிங்களே வந்து சேர்கின்றன. சில தோட்டங்களுக்கு வரும் அவசர கடிதங்கள் தாமதமாகி உரியவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் பல்கலைக்கழக அனுமதி இழந்த மாணவர்கள், முக்கிய அரச தொழில் வாய்ப்புக்களை இழந்த இளைஞர் யவதிகள் என எமது சொந்தங்கள் பலநூறு பேர் உள்ளனர். சில சமயங்களில் தோட்ட அலுவலகங்களில் கடிதங்கள் குவிந்து கிடக்கும். முகவரி அற்ற கடிதங்கள் என்பதை விட அநாதையான மொட்டைக் கடிதங்கள் என்றே இவற்றை கூற வேண்டும்.

பெருந்தோட்ட மக்களுக்கு நிரந்தர முகவரி கொடுக்க வேண்டுமானால் முதலில் அவர்களுக்கு காணி உரிமை வழங்கப்பட்டு ஆகக் குறைந்தது 20 பேர்ச் காணி ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட வேண்டும். அதன்பின் அந்தக் காணியில் வீடுகள் அமைத்துக் கொடுத்து அவர்களுக்கு தனி வீதிக் குறி, வீட்டு இலக்கம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு நிரந்தர முகவரி கொடுக்கப்பட வேண்டும். இதனூடாக மாத்திரமே மலையக மக்களை நிரந்தர முகவரி உள்ள சமூகமாக மாற்ற முடியும். மாறாக தற்போதுள்ள லயன் காம்பராக்களுக்கு இலக்கமிட்டு முகவரி கொடுத்து விட்டதாக மலையக மக்களை ஏமாற்ற முயற்சிக்கக்கூடாது.

அப்படி செய்ய நினைத்தால் ஆண்டாண்டு காலமாக ஏமாற்றப்பட்டு 200 வருடங்கள் கடந்தும் அரங்கேற்றும் ஏமாற்று வித்தையாக பார்க்கப்படும் ஏனெனில், இன்னும் எமது மக்கள் காணி உரிமை இன்றி, வீட்டுரிமை இன்றி – முகவரி இல்லாமல் கல்வி, சுகாதார குறைப்பாடுகளுடன வாழும் நிலையில் – தற்போது பெருந்தோட்ட தொழிலாளர்களின் இறுதி மூச்சாக கருதப்படும் ஊழியர் சேமலாப நிதியிலேயேயும் அரசாங்கம் கை வைத்துள்ளது. நாட்டுக்காக உழைத்து, அன்னிய செலவானியை ஈட்டிக்கொடுத்து, கடனை அடைத்த மக்கள் மீது கடன் மறுசீரமைப்பு பாரத்தை முழுமையாக ஏற்றியுள்ளது.

ஆகவே, 200 வருடங்களின் பின்பாவது எமது மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொடுத்து அவர்களை இந்த நாட்டின் பிரஜைகளாக முழுமையாக அங்கிகரிக்கவும் என பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் கோரிககை விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles