மலையக மக்கள் முண்ணனியை உருவாக்குவதில் பாரிய பங்களிப்பு செய்தவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சர் அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் ஆலோசகரழகவும் அவரின் பிரத்யேக செயலாளருமாகவும் செயற்பட்ட பழனிவேல் செல்வராஜ் இன்று (18) காலமானார். இவர் திடீர் உடல்நலக் குறைவால் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக தலவாக்கலை மிடில்டன் தோட்டத்தில் ( பெரிய மல்லியப்பு) வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கிரியைகள் நாளை (19) புதன்கிழமை மாலை தலவாக்கலை மிடில்டன் தோட்ட (பெரிய மல்லியப்பு) தோட்டத்தில் நடைப்பெற்று தலவாக்கலை மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும். நீண்டகால தொழிற்சங்க அனுபவம் கொண்டவராக விளங்கிய பழனிவேல் செல்வராஜ் அவர்கள், தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மக்களுக்கான சேவைக்காக அர்ப்பணித்தவர்.
தலவாக்கலை பிரதேச மக்கள் தங்களுக்குத் தேவையான கடிதங்கள் மற்றும் ஆவணங்களைத் தயாரிக்க உதவியவர். தமக்கு எத்தனை வேலைகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு ஓடோடி வந்து உதவி செய்பவர். எந்தப் பணியையும் எப்போதும் சிரித்த முகத்துடனும் அன்புடனும் செய்து கொடுப்பது அவரது தனிச்சிறப்பாக இருந்தது.
மலையக மக்கள் முன்னணி அலுவலகப் பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டதுடன், காலஞ்சென்ற அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனின் அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளிலும் முக்கிய பங்காற்றியவர். மக்களுடன் நெருக்கமாகப் பழகி, அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு, தன்னால் இயன்ற உதவிகளை எந்த எதிர்பார்ப்புமின்றி செய்து வந்த ஒரு மனிதநேய பணியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலவாக்கலை பி.கேதீஸ்










