” முடியாட்சியின்போது சோழர்களின் ஆக்கிரமிப்பின்போது எமது மன்னர்கள் மண்டியிடவில்லை, சமரிட்டு நாட்டை பாதுகாத்தனர், இன்று குடியாட்சியின்போது எட்கா ஒப்பந்தம்மூலம் இலங்கையை இந்தியாவின் மாநிலமாக மாற்றுவதற்கான நகர்வுகள் இடம்பெறுகின்றன.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ தனுஷ் கோடிக்கு அண்மையில் வந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி தூரம் பார்க்கும் கருவிமூலம் மன்னார் நோக்கி பார்த்துள்ளார். பாலமும், வீதியும் அமைக்க திட்டமிடுகின்றனர். இதற்கிடையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எரிசக்தி கூட்டமைப்பு பற்றி ஜனாதிபதி அறிவித்துள்ளார் . நாட்டில் விவசாய உபகரணங்களுக்கும் வற் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் உற்பத்தி செலவு அதிகரிக்கும். ஏற்கனவே இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்யப்படுகின்றது. அரிசி விலை அதிகரிக்கப்பட்டால் அரிசியும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும். இதனால் உள்நாட்டு விவசாயம், உற்பத்தி பாதிக்கப்படும். உணவு பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தலும் ஏற்படும்.
தற்போது எட்கா உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு முற்படுகின்றனர். இதன்மூலமும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள், முயற்சியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இலங்கையின் சேவை சந்தையை இந்தியா ஆக்கிரமிக்கும் நிலை உருவாகும். எட்காவால் இலங்கை பகுதியளவு இந்திய மாநிலமாக மாறும். இதனை நோக்கியே நகர்வுகள் இடம்பெறுகின்றன. இந்திய நிதி அமைச்சர் இலங்கைவந்தபோது அவர் தலதாமாளிகை சென்றார், மகாநாயக்க தேரர்களிடமும் ஆசிபெற்றார். இதெல்லாம் இதன் அங்கங்கள்தான்….
சேர, சோழ, பாண்டியர்களின் ஆக்கிரமிப்பின்போது மண்டியிட்டு பார்த்துக்கொண்டிருக்கவில்லை, எமது மன்னர்கள் காட்டுக்கு சென்று, பழங்கள் சாப்பிட்டு, கஷ்டங்களுக்கு மத்தியிலும் சோழர்களுடன் சமரிட்டு நாட்டை மீட்டனர்.” – என்றார்.










