நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகிய சமூக ஆர்வலர் கே.ரீ.குருசாமி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ அரசியல்வாதிகள் பாராளுமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக மக்களின் வாக்கு பலத்தால், தெரிவுசெய்யபட்ட பினனர் தங்களின் கடமைகளை, நேர்மையாகச் செய்வதில்லை. இந்த பிழையான போக்கை மாற்ற என்னால் முடிந்தளவு போராடி, அது சாத்தியப்படாத காரணத்தினால் தான், மேற்படி எனது கட்சிப் பதவிகளிலிருந்தும், கட்சிகளிலிருந்தும் தற்போது வெளிவந்திருக்கிறேன்.
கடவுளின் நேரடிப் பிரதிநிதிகள் போல தங்களை நினைத்துக்கொண்ட ஒரு சிலர், பாராளுமன்ற உறுப்பினர் பதவி, மற்றும் அமைச்சர் பதவிகளுக்கான வரப்பிரசாத வாய்ப்புக்களை முழுவதுமாக பெற்றுக்கொண்டு, தாம் சார்ந்த சமூகத்தினுடைய பிரச்சனைகள் என்னவென்று அறிந்திருந்தும், அவற்றுக்குரிய தீர்வினைக் காண எந்தவித ஆக்கபூர்வ நடவடிக்கையும் எடுக்காததன் விளைவுதான் கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளாகி வெளிவந்திருக்கிறது.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் இதே நிலைமைதான் ஏற்படபோகின்றது என நினைக்கிறேன். அது கண்கூடாகவும் தெரிகின்றது. அரசியல்வாதிகள் மீது வெறுப்படைந்த மக்கள் மாற்றத்தையும், ஊழலற்ற அரசியலையும் எதிர்பார்த்தே “தேசிய மக்கள் சக்தியை” ஆட்சியில் அமர்த்தி உள்ளார்கள்.
இதன் மூலம் நாட்டிலே ஒரு புதிய அரசியல் கலாசாரம் உருவாகும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கைக்கு ஏற்றாற்போல் நானும் செயல்பட நினைப்பதோடு, எதிர்கால அரசியல் பயணத்தை நான் சார்ந்த சமூகத்துடன் இணைந்து செம்மையாகவும், உண்மையாகவும் நடாத்த உத்தேசித்துள்ளேன்.
அதற்குரிய காலஅவகாசத்தை வேண்டியே, இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளேன்.” – என்றார்.










