ஜனாதிபதி தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்!

ஜனாதிபதி தேர்தலை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ சிங்கள மக்களுடன் இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், இந்த நாட்டில் ஒற்றையாட்சி முறை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசியலமைப்பொன்று கொண்டுவரப்பட்டு எங்கள் தேசம் ஓர் இறைமையுள்ள தேசியமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலொன்று நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறுமா இல்லையா என்ற சந்தேகமும் உள்ளது. சமஷ்டி அரசியலமைப்புக்கான கோரிக்கையொன்றை தென்னிலங்கை முன்வைக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம்.

இல்லாவிட்டால் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

தேர்தல்மீது தமிழ் மக்கள் வெறுப்படைந்துள்ள சூழலில் வடக்கு, கிழக்கில் உள்ள சிவில் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இணைந்து பொது வேட்பாளர் என்ற ஒரு சதியை அரங்கேற்றுகின்றனர்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு இரண்டு ஆண்டுகாலம் ஆட்சியை தொடர அனுமதி வழங்க வேண்டுமென்ற அரசியல் வாதிகளே வடக்கு, கிழக்கில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறங்க முயற்சிக்கின்றனர்.

ரணில், சஜித், அனுர ஆகிய மூவருக்கும் தமிழர்கள் பகிஷ்கரிப்பு என்ற ஒரு ஆயுதத்தை கையில் எடுக்க கூடாதென்ற தேவை உள்ளது. அவர்கள் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை நிராகரிக்கும் ஒரு நிலைமை வரக் கூடாது என்பதே அவர்களின் நிலைப்பாடு.

அதற்காகவே தமிழ் பொது வேட்பாளர் என்ற நாடகம் அரங்கேற்றப்படுகிறது. வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் முற்றாக இந்த தேர்தலை முடிவெடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கிறோம்.” என்றார்.

Related Articles

Latest Articles