பாராளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார்
உலகளாவிய ரீதியில் மக்களுக்கு சோதனை நிறைந்த ஆண்டாக மலர்ந்துள்ள இந்த வருடத்தில் தீபாவளிப் பண்டிகையை இந்துக்கள் அனைவரும் மிகவும் எளிமையான முறையில் ஆடம்பரமின்றி அமைதியாகக் கொண்டாட வேண்டும்.
நாட்டின் கொரோனா வருவதற்கு முன்னர் காத்துக் கொள்ள அரசாங்க மட்டத்தில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இருந்தும் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்போது நோய் வந்தபின் சிகிச்சையளிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம். கொரோனா மேலும் பரவாமல் இருக்க நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து சுகாதார நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
அந்த வகையில் தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் ஆலயங்களில் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொண்டு தத்தமது வீடுகளில் மிகவும் கட்டுக் கோப்புடன் குடும்பத்தோடு கொண்டாடுவதே இன்றைய கால கட்டத்தில் பொருத்தமாக இருக்கும். வெறுமனே கூட்டம் கூடாமல், கண்ணுக்குத் தெரியாத கிருமியிடமிருந்து உயிர்களைப் பாதுக்காத்துக் கொள்வதே சாலச் சிறந்ததாகும்.
உலகில் இன்று ஏற்பட்டுள்ள சோதனையும், வேதனையும் கடந்து போகும் நிலைமை விரைவில் உருவாகி மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கின்ற சூழ்நிலை மலர வேண்டும் என்று தீபத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனுசா சந்திரசேகரன்
நெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து வாழும் மனோ தைரியத்தினை நாமே நமக்கு ஏற்படுத்திக் கொண்டால் மாத்திரமே எம்மால் இயல்பு வாழ்க்கையை வாழ முடியும்.
உறவினர்கள் நண்பர்களுடன் ஒன்றிணைந்து இத் தீபத் திருநாளை கொண்டாட முடியாவிட்டாலும் கூட மனதளவில் முழுமையான மகிழ்ச்சியுடன் இத் திருநாளை கொண்டாடுவதுடன் மனித நேயம் பாரம்பரிய பண்புகள் எமக்கே உரிய கலாச்சார விழுமியங்கள் அனைத்தையும் குறைவின்றி வளர்த்துக்கொள்ளும் பண்புகளின் ஊடாக ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக்கிக் கொள்வோம்.
ஏதாவது காரணங்களினால் எதிர்வரும் காலங்கள் சவால் மிக்கதாக அமைந்தாலும் கூட அதனையும் வெல்லும் மனோ தைரியத்தினையும் ஊக்கத்தையும் எல்லாம் வல்ல இறைவன் எமக்கு வழங்க வேண்டுமென இந் நன் நாளில் பிராத்தித்து வாழ்த்துகிறேன்.
பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ்
தீபாவளி கொண்டாட்டத்தை குறைப்போம். எமது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 கொரோனா தொற்று இரண்டாவது தடைவையாகவும் அதி வேகமாக பரவிவருகின்றது. இன்றைய சூழ்நிலையில் இந்த தொற்றிலிருந்து எம்மையும் எமது உறவினர்களையும் நண்பர்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக நாம் பாதுகாப்பு சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும்.
அத்தோடு கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் மீண்டுவரவேண்டும். என்பதற்காக மதஸ்தலங்களிலும் வீடுகளிலும் பிராத்தனைகளையும் மேற்கொள்வோம்.
இந்த தீபாவளி திருநாளில் அனைவருடைய துன்பங்களையும் துயரங்களையும் விலக்கி எல்லோருடைய வாழ்விலும் தீப ஒளி தொடர்ந்து கிடைத்திட வேண்டும். நாம் அனைவரும் இந்த தீபாவளியை எளிமையாக கொண்டாடுவோம் எனக் கூறிக் கொண்டு அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்
“தனித்திரு,விழித்திரு,வீட்டிலிரு என்பதையே தாரக மந்திரமாக கொண்டு இம்முறை தீபத்திருநாளை கொண்டாடயிருக்கின்றோம்
எமக்கு நினைவிருக்கும் காலத்திலிருந்து சுகாதார ரீதியாக முன் எச்சரிக்கை கொண்ட தீபத்திருநாளை கொண்டாடுவது இதுதான் முதற்தடவையாகும்.
பல வருடங்களுக்கு முன்னர் மலையக தமிழ் மக்களிடம் மலேரியா,கொலாரா போன்ற தொற்று நோய்கள் பரவி பல்லாயிர கணக்கானவர்களை பலிகொண்டதாக நாம் அறிந்துள்ளோம்.
அக்காலங்களில் அம்மக்கள் தீபாவளி,பொங்கல் போன்ற பண்டிகைகளை கொண்டாடாமல் விட்டிருக்கலாம், இதுவும் அதுபோன்ற ஒரு காலக்கட்டம் என்பதால் சுகாதாரத்துறை எமக்கு விடுத்துள்ள அறிவுதல்களுக்கு அமைவாக கூட்டம் சேர்க்காது விலகியிருந்து தூய்மை பேணி இப்பெருநாளை அமைதியாக கொண்டாடுமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச்செய்தி
உலகெங்கிலும் வாழும் இந்துக்கள், தீபாவளி பண்டிகை தினமான இன்று, அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபடுவர். தீபத் திருநாள் தீபாவளி பண்டிகையானது அனைத்து உள்ளங்களிலும் இருள் நீங்குவதுடன், தாம் ஒளிபெற்று நல்வாழ்வு வாழ்வதற்கான பிரார்த்தனையுடன், பரஸ்பரம் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறி – அன்பையும் மகிழ்ச்சியையும் அவர்கள் தமக்குள் பகிர்ந்துகொள்ளும் கலாசார விழா என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது.
அந்த வகையில் – இன மற்றும் சமய நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் மனிதர்களிடையே மேம்படுத்துவதற்கு – இத்தகைய இறை நம்பிக்கை சார் விழாக்கள் பெரிதும் உதவும் என்பது எனது நம்பிக்கையாகும்.
முழு உலகமும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பல்வேறு பாரிய பிரச்சனைகளுக்கும் முகம்கொடுத்துள்ள இச்சந்தர்ப்பத்தில் – வழிபாட்டுக் கிரியைகளில் ஈடுபடுவது மனித உள்ளங்களுக்கு அமைதியை தருகின்றது.
இந்த தீபத் திருநாளில், அந்த அமைதிக்காக, எமது நாட்டிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து இந்துக்களும் ஒருமனதாக – கடவுளுக்காக – அர்ப்பணிப்புகளைச் செய்வர் என்பது எனது நம்பிக்கையாகும்.அது சிறந்ததோர் சமூகத்தையும் ஆரோக்கியமான வாழ்வையும் கட்டியெழுப்பும் எமது நோக்கத்திற்கும் ஆசீர்வாதமாக அமையும் என்றே நான் எண்ணுகின்றேன்.
இந்த தீபத் திருநாள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும், அவர்கள் எதிர்பார்க்கும் உள அமைதி கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் வாழ்த்துச்செய்தி
இருளை அகற்றி ஒளி ஏற்றும் இந்து மக்களின் உயர்ந்த சமயப் பண்டிகைத் தினமான தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதிற் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இருட்டு வழியிற் தீபம் இருந்தால் அதுவே வழிக்குத் துணையாக அமையும். மனித வாழ்க்கைப் பாதைக்கு அருட்தீபம் துணை நின்றால் வாழ்வு சுபீட்சமாகும். அத்தகைய அருட் தீபமாகிய ஆன்மீக ஞான ஒளியை இறைவழிபாடு மூலம் பெறும் சிறப்பு வாய்ந்த நன்னாளே தீபாவளித் திருநாள். தேசிய ஒற்றுமைக்கு இது ஒரு சிறந்த நாளாகும்.
எல்லா மதங்களிலும் விளக்கு ஏற்றுவதன் காரணம் இருளையும் அறியாமையையும் அகற்றி ஒளியை பரப்புவதற்கே. தீபாவளியும் அதன் எதிர்பார்ப்புகள் நிறைந்த தீப ஒளியும் சமூகங்களுக்கு மத்தியிற் சிறந்த புரிந்துணர்வுக்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.
மிக நீண்டகாலமாக எமது மக்களைப் பிரித்துவைத்திருந்த எல்லா வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இத் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம். இந்த ஒளியை நாம் அணைய விடாமல் பாதுகாத்து மறுபடியும் இருளுக்குள் மூழ்காமல் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
இன்று நம் தேசம் “நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” எனும் அரசாங்கத்தின் தேசிய கொள்கைக்கு அமைவாக ஒளிநிறைந்த வளர்ச்சிப் பாதையிற் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் நாம் முன்னேற்றம் காண முயல்கின்றோம்.
இன்று உலகையே அச்சுறுத்திவரும் கொவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து இலங்கை மக்களைப் பாதுகாக்கும் பணியினை அரசாங்கம் மக்கள் அனைவரதும் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக செயற்படுத்தி வருகின்றது. கொவிட்-19 நோய்த்தொற்றிருந்து இலங்கைத் திருநாடு விரைவில் மீள்வதற்கும் எம் மக்களுக்கு எல்லா சுபீட்சங்களையும் தரும் நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக இத்தீபாவளித் திருநாள் அமையட்டும்.
இலங்கைவாழ் இந்து மக்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்!