‘ஜப்னா கிங்ஸ்’ அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி

கண்டி பெல்கன்ஸ் அணிக்கு எதிரான முதல் தகுதிகாண் போட்டியில் டக்வர்த் லுவிஸ் முறையில் 24 ஓட்டங்களால் வெற்றியீட்டிய நடப்புச் சம்பியன் ஜப்னா கிங்ஸ் அணி லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்தப் போட்டியில் தோல்வியை சந்தித்த கண்டி அணிக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேற மற்றொரு வாய்ப்பு உள்ளது. அந்த அணி இரண்டாவது தகுதிகாண் போட்டியில் இன்று (22) களமிறங்கவுள்ளது.

கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய வனிந்து ஹசரங்க தலைமையிலான கண்டி அணி 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களையே பெற்றது.

இதில் ஜப்னா அணியின் சுழல் வீரரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இதன்மூலம் அவர் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

இந்நிலையில் பதிலெடுத்தாடிய ஜப்னா கிங்கஸ் அணியின் இன்னிங்ஸில் இரு முறை மழை குறிக்கிட்டது. இதில் அந்த அணி 11 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 98 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மழை குறிக்கிட்டதால் போட்டியை தொடர முடியாமல் போனது.

இதனால் டக்வர்த் லுவிஸ் முறையில் போட்டி முடிவு தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது ஜப்னா அணிக்காக அதிகபட்சமாக அவிஷ்க பெர்னாண்டோ 11 பந்துகளில் 21 ஓட்டங்களை பெற்றார்.

Related Articles

Latest Articles