சம்பள உயர்வு விடயத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லெட்சுமணன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1700 ரூபா வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத்தினால் வர்த்தமானி வெளியிடப்பட்டது. இருப்பினும் குறித்த வர்த்தமானிக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த மே முதலாம் திகதி மேதினத்தன்று வீரவசனம் பேசினார்கள். ஆனால் இன்று மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். அமைச்சர்கள் மற்றுமல்ல மலையகத்தை சேர்ந்த இன்னொரு பாராளுமன்ற உறுப்பினரும் சேர்ந்து மக்களை ஏமற்றுகின்றார்.
இவர்கள் தற்போது மக்களிடம் நல்லவர்கள் போல் நாடகம் நடிக்கின்றார்கள். மலையக மக்களுக்கு ஒரு நாள் சம்பளம் 1700 ரூபா தற்போது மிகவும் அவசியமான பிரச்சினை. அதையும் கூட இவர்களால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.
கடைசியாக கூட்டி கழித்து பார்த்தால் முதலாளிமார் சம்மேளனம் மாத்திரமே வெற்றி பெற்று உள்ளது.
இவர்கள் அமைச்சு பதவியில் இருந்து எந்த பயனும் இல்லை. அது மாத்திரமல்லாமல் அமைச்சருக்கு நுவரெலியா நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதுவே ஒரு சாதாரண குடி மகனுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தால் வீதியில் இழுத்து சென்று ஜீப் வண்டியில் ஏற்றி இருப்பார்கள்.
அது மாத்திரம் இன்றி இவரை கைது செய்வது ஏன் என்றால் இவர் நுவரெலியா நீதிமன்றத்திக்கு சமுகமளிக்காமையால் தான் இவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவரை தியாகி என்றோ நெல்சன் மண்டேலா அல்லது மகாத்மா காந்தி என்று கூறியோ இவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.
மக்கள் இதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.