தெரியாத முகங்களை நம்பி வாக்களித்தால், மக்களுக்கு பிரச்சினையெனவரும்போது குரல் கொடுப்பதற்கு எவரும் இருக்கமாட்டார்கள். எனவே, என்றும் மக்களுடன் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை மக்கள் நாடாளுமன்றம் அனுப்பி வைக்க வேண்டும் என்று இதொகாவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.
புளியாவத்தை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,
“தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதற்கும், எமது மக்களை அரசியல் ரீதியில் அநாதைகளாக்குவதற்கும் மாற்றம், மாற்றம் எனக் கூறிக்கொண்டு தேர்தல் காலங்களில் நுவரெலியா மாவட்டத்துக்கு பலர் வந்துள்ளனர். இவர்களில் பலரை மக்கள் இதற்கு முன்னர் கண்டிருக்கவும்மாட்டார்கள். வாக்கு கேட்பதற்காக மட்டுமே தோட்டப்பகுதிகளுக்கு வருகின்றனர். பல உறுதிமொழிகளை அள்ளி வழங்குகின்றனர்.
அவர்களுக்கு வாக்கு கேட்கும் உரிமை இருக்கின்றது. எனினும், காங்கிரஸ் எதையும் செய்யவில்லை எனக் கூறி, காங்கிரஸை விமர்சித்தே அரசியல் செய்துவருகின்றனர். தெரியாத இந்த இந்த முகங்களை நம்பி வாக்களித்தால் இருக்கின்ற பிரதிநிதித்துவமும் இல்லாமல்போகும். தேர்தலின் பின்னர் அவர்களும் காணாமல்போய்விடுவார்கள்.
எனவே, எமது பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தேசிய அமைப்பாளர் சக்திவேல் மற்றும் எனக்கு வாக்களித்து, மக்கள் சேவை தொடர ஆணை வழங்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன். நாம் கட்சி பார்த்து சேவை செய்யவில்லை. எமது சமூகத்துக்காகவே சேவை செய்துவருகின்றோம். நமக்கான பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் இருப்பதால்தான் நமக்கு பலம். எனவே, சிந்தித்து, யானை சின்னத்துக்கு வாக்களிக்கவும்.” – என்றார்.
கி.கிஷாந்தன்