‘ஜெனிவா நெருக்கடியிலிருந்து மீள ஒத்துழைப்பு வழங்க தயார்’- ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு

” ஜெனிவா தீர்மானத்தை வைத்து எதிரணி அரசியல் பிழைப்பு நடத்தவில்லை. ஜெனிவா நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றோம். அதற்காக சர்வதேசத்தின் நம்பிக்கையை வெல்லும் வகையில் உள்ளக பொறிமுறை நிறுவப்படவேண்டும்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது,

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் மாநாடு  எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு, அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நேற்று முன்தினம் வெளியிட்டிருந்த கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கையிலேயே கலாநிதி கலாநிதி ஹர்ஷ டி சில்வா எம்.பி. மேற்படி அறிவிப்பை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ஜெனிவா தீர்மானத்தை அடிப்படையாக வைத்து எதிரணியினர் மாயையை தோற்றுவித்துவருகின்றனர் என ஜீ.எல். பீரிஸ் அறிவிப்பு விடுத்துள்ளார். நாம் மாயையை தோற்றுவிக்கவில்லை. உண்மை நிலைவரம் என்னவென்பது தொடர்பில் தெளிவுபடுத்தல்களை முன்வைத்து வருகின்றோம். எனவே, யாதார்த்தம் என்னவென்பதை புரிந்துக்கொண்டு இப்பிரச்சினையில் இருந்து வெளியே வருவதற்கு அரசு முயற்சிக்க வேண்டும்.அதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு நாம் தயார். இது தொடர்பில் எமது தலைவர் நாடாளுமன்றத்திலும் அறிவிப்பு விடுத்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் போர்காலம் குறித்து மட்டும் குறிப்பிடப்படவில்லை. அது தொடர்பில் ஒரிரு பக்கங்களே உள்ளன. நடப்பு அரசின் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களே பெரும்பாலும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ஜனநாயக விரோதச் செயற்பாடுகள், இனவாதம், சுயாதீன நிறுவனங்கள் அரசியல் மயப்படுத்தப்படுகின்றமை, இராணுவ மயக்காமல், கருத்து சுதந்திரம் மறுப்பு, அரசை விமர்சிக்கின்றனவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றமை உள்ளிட்ட விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனவே, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு .மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

அதேவேளை, போர் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் ,சர்வதேச நம்பிக்கையை வெல்லும் விதத்திலான சுயாதீன பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கவேண்டும். அப்போதுதான் இப்பிரச்சினையில் இருந்து மீள முடியும். அதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தினால்கூட சர்ச்சைகள் உருவாகாது.

அதேபோல ஒற்றையாட்சிக்குள் இறைமை, சுயாதீனம் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதிகாரப்பகிர்வும் இடம்பெறவேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles