” ஒரு நாட்டுக்கு அழுத்தம் பிரயோகிப்பதற்காக மனித உரிமை விவகாரத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் அணுகுமுறையை அனுமதிக்க முடியாது.” என்று சபை முதல்வரும்,
அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார்.
” ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்றது. அப்பேரவையின் சமவாயங்கள் மற்றும் வழிகாட்டல்கள் எமக்கு முக்கியம். எனினும், சில நாடுகள் எல்லா விடயங்களையும் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி ஏனைய நாடுகளுக்கு அழுத்தம் பிரயோகிப்பதை அனுமதிக்க முடியாது.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையின் இறையாண்மைக்காக 43 நாடுகள் முன்னிலையாகின. இலங்கைக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டுள்ளன. அந்நாடுகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஏனைய நாடுகளும் இலங்கை தொடர்பில் உண்மையான கருத்துகளை அடிப்படையாகக்கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். மாறாக அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படக்கூடாது.
73 வருடங்களுக்கு பிறகு இனவாதமற்ற அரசாங்கம் இலங்கையில் உதயமாகியுள்ளது. எனினும், சில கட்சிகள் இனவாதத்தை பரப்புவதற்கு முற்படுகின்றன. இப்படியான சூழ்நிலையிலும் இனவாதமற்ற ஆட்சியை முன்னெடுப்பதற்கே நாம் முற்படுகின்றோம்.” – எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.