ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகவே இந்தியா வாக்களிக்க வேண்டும் – ப.சிதம்பரம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசுக்கு எதிராக வாக்களித்து தமிழர் பக்கம் இந்தியா நிற்க வேண்டும் என காங்கிரஸ் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர்: ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை அரசின் மனித உரிமை மீறலுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவது பரிசீலனையில் உள்ளது.

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும். தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்து இலங்கைத் தமிழர்களின் பக்கம் நிற்க வேண்டும் என அவர் பதிவிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடர் தற்போது ஜெனிவாவில் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசை பொறுப்பேற்குமாறு வலியுறுத்தும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளை திங்கள்கிழமை இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கு எதிரான இந்தத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இதை ஏற்று இந்தியாவும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Latest Articles